Published : 07 Oct 2024 05:46 PM
Last Updated : 07 Oct 2024 05:46 PM
திருச்சி: முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய நிதியமைச்சர்கள் திருச்சியில் இருந்து ஒரே விமானத்தில் சென்னைக்கு பயணித்த சுவாரஸ்ய சம்பவம் இன்று நிகழ்ந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 7 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக மதியம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள், சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி பார்க்கச் சென்ற கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டபோது, பேட்டியை தவிர்த்துவிட்டுச் சென்றார்.
அதன்பின் சிறிது நேரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது காங்கிரஸ் முன்னாள் மேயர் சுஜாதா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தது குறித்து ப.சிதம்பரத்திடம் தெரிவித்தார். “ஓ அப்படியா” என சிறு ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே விமான நிலையத்துக்குள் வந்தார் சிதம்பரம்.
அப்போது செய்தியாளர்கள், "ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளதே" எனக் கேட்டபோது, "அதற்குள் உங்களுக்கு முடிவுகள் தெரிந்து விட்டதா?" எனக் கேட்ட சிதம்பரம், "இறுதியில் காங்கிரஸ் கட்சியினுடைய லட்சியங்கள்தான் வெல்லும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இடையில் அந்த லட்சியங்களை மாற்று லட்சியங்கள் வெல்வது மாதிரி தெரிந்தாலும் இறுதியில் காங்கிரஸின் லட்சியங்கள், கொள்கைகள் தான் வெல்லும். அது நாளை நிரூபணமாகும் என நம்புகிறேன்.
சென்னையில் விமான சாகச நிகழ்வின் போது ஐந்து பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. பத்திரிகைகளில் வந்த செய்தியை தான் நான் பார்த்தேன். என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது” என்றார் பின்னர், முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் நிதியமைச்சரும் இண்டிகோ விமானத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT