Published : 07 Oct 2024 01:47 PM
Last Updated : 07 Oct 2024 01:47 PM
சென்னை: “இந்திய விமானப்படை அரசுக்கு, 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். நாங்கள் ஏற்பாடு செய்தததோ 4000-த்துக்கும் மேற்பட்ட படுக்கைகள். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்,” என்று மெரினா உயிரிழப்பு சம்பவம் குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்திய விமானப்படை தொடங்கியது 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி. இந்த தேதியில் தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை 92 ஆண்டுகளை நிறைவு செய்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இத்தகைய விமானப்படை தங்களது பலத்தை மற்றும் கட்டமைப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் பெரிய விமான சாகசத்தை உலகுக்கு தெரிவித்திடும் வகையில் விமான வான்சாகசத்தை செய்வதற்காக சென்னையை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்.
அப்படி செய்யும்போது தமிழக அரசிடம் என்னென்ன வசதிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டார்களோ? அவர்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் தலைமைச் செயலரின் தலைமையில் 2 கூட்டங்களை நடத்தி பல்வேறு சேவை துறைகளை ஒருங்கிணைத்து அந்தக் கூட்டங்களின் வாயிலாக யார் யாருக்கு என்னென்ன கடமைகள் என ஒருங்கிணைத்து பணிகள் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் சார்பாக பல்வேறு மருத்துவக் குழுக்கள் அமைத்து 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு, இதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பாராமெடிக்கல் குழுக்களையும் அமைத்திருந்தோம்.
இவர்களோடு சேர்ந்து இந்திய விமானப்படை அரசுக்கு வைத்த கோரிக்கை ஒரு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் சென்னையைப் பொறுத்தவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 20 தீவிர சிகிச்சைக்குரிய படுக்கைகளும், ரத்த வங்கி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.
65 மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தார்கள். இதோடு மட்டுமல்லாமல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என்று அவர்கள் கேட்ட 100 படுக்கைகள், ஆனால் நாங்கள் ஏற்பாடு செய்தததோ 4000-த்துக்கும் மேற்பட்ட படுக்கைகள். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பங்கேற்றது 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். விமானப்படை சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி நடைபெற்றது. இந்நேரத்தில் வெயிலின் தாக்கம் என்பது கூடுதலாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் விமானப்படையின் அறிவுறுத்தல்களான இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள் குடையுடன் வர வேண்டும், தண்ணீருடன் வர வேண்டும், கண்ணாடி அணிந்து வர வேண்டும், தொப்பி அணிந்து வர வேண்டும் என்று அவர்கள் முன்னெச்சரிக்கையாக அனைத்து அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்கள்.
சிகிச்சை பெற்றவர்கள் விபரம்: இது ஒரு தேசிய அளவில் பார்க்க வேண்டிய விஷயம். உலகுக்கு இந்திய விமானப் படையின் கட்டமைப்பை தெரிவிப்பது ஆகும். இதில் ஏற்பட்ட இறப்பு சம்பவம் உண்மையில் வருத்தத்துக்குரிய ஒன்று. இதில் அரசியல் செய்ய வேண்டாம். இதில் ஏற்பட்ட 5 பேரின் இறப்பு என்பது உண்மையில் வருத்தத்துக்குரியது. இவர்கள் 5 பேரும் இறந்து தான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துமவமனையில் ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர், ஒருவர் இறப்பு, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டார்கள், 46 பேர் புறநோயாளிகளாகவும், 4 பேர் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பி விட்டார்கள். அதில் இறப்பு 2 பேர், அதேபோல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். புறநோயாளிகள் 7 பேர், உள்நோயாளிகளாக ஒருவர், இறந்து போனவர்களின் எண்ணிக்கை 2, ஆக மொத்தம் 5 பேர் இறந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வெயில் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. புறநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 93. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT