Published : 07 Oct 2024 04:49 AM
Last Updated : 07 Oct 2024 04:49 AM
சென்னை: புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயைில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து,ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
புதிய அமைச்சர்கள் செப்.29-ம் தேதி பதவியேற்றனர். இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களும் அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிதாக சேர்ந்துள்ள அமைச்சர்கள் 4 பேரில் கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதியவர்கள். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் நாளை (அக்.8-ம் தேதி) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
பொதுவாக தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அனுமதிகள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். அந்த வகையில், முதல்வர் பயணத்தின் அடிப்படையிலான அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
இதுதவிர, தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், ஏற்கெனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான நிதி வருகை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகள் குறைப்பு? இவைதவிர, தமிழகத்தில் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், தற்போதுள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் இருந்து மேலும் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT