Published : 21 Jun 2018 09:01 AM
Last Updated : 21 Jun 2018 09:01 AM
ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணத்தை ஒழிப்பது, வீடு வாங்குவோர் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம் 2015-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இத்துறையில் பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கி மூலமே நடைபெற வேண்டும் என்பதற்காக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள், ஏஜென்ஸிகள், புரோக்கர்கள் என அனைவரும் ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்துதான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) துணைத் தலைவர் எஸ்.சிவகுருநாதன் கூறும்போது, “எங்கள் கூட்டமைப்பில் 135 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரும் ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்துதான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் இத்துறையில் சுமார் 4 ஆயிரம் கட்டுநர்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏஜென்ஸிகளும் (புரோக்கர்) உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு வீட்டு மனை, வீடு, குடியிருப்புகள், வணிகக் கட்டிடம் போன்றவற்றை கட்டி விற்பனை செய்தால் ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இப்பதிவைச் செய்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை” என்றார்
அகில இந்திய கட்டுநர்கள் சங்க முன்னாள் தேசியத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “ரியல் எஸ்டேட் மத்திய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிரந்தர குழு அமைத்து, அதற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. ஒருவர் 10 அல்லது 100 வீடுகளை சொந்த நிதி அல்லது வங்கி நிதியில் கட்டி விற்பனை செய்தால் அவர் இந்த சட்டத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்ற விதிவிலக்கு உள்ளது. அதேநேரத்தில் அவரே வேறொரு கட்டுமானத் திட்டத்துக்காக பூமிபூஜை போடும் போது விளம்பரம் செய்தாலோ, வாடிக்கையாளர்களிடம் முன்பணம் பெற்றாலோ ரியல் எஸ்டேட் சட்டத்தில் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்”என்றார்.
ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்யாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காததாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்று கெடு விதிக்காததாலும், இச்சட்டத்தில் கடுமையான நிபந்தனைகள் இருப்பதாலும் இதில் பதிவு செய்ய ஏராளமான கட்டுநர்கள் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT