Published : 03 Jun 2018 01:22 PM
Last Updated : 03 Jun 2018 01:22 PM
புதுச்சேரியில் இறால் பண்ணை தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரொக்கப் பணத்தினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். சிசிடிவி பதிவு விவரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்கையும் விவரமாகக் கையோடு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ரொசாரியோ வீதியில் சரவண பாபு வசித்து வருகிறார். புதுச்சேரியை அடுத்த கூணிமேடு பகுதியில் இறால் பண்ணை அமைத்து தொழில் நடத்தி வருகிறார். மதுரையைப் பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் ஒரு பங்களா கட்டியுள்ளார். முத்தியால்பேட்டை பகுதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடி வந்தார்.
வாரந்தோறும் வெள்ளியன்று கோட்டக்குப்பம் பங்களாவுக்கு சென்று ஞாயிறு காலை அவர்கள் வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோட்டக்குப்பம் பங்களா வீட்டிற்கு சென்றிருந்தார். இன்று காலை வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 300 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி சாம்மான்களை திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்த நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் வீட்டிலிருந்த சிசி டிவி கேமரா பதிவுகள் கொண்ட கருவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து போலீஸார் அருகிலுள்ள வீடுகள் பதிவான சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதிகமான குடியிருப்புப் பகுதிகள் இருக்கக்கூடிய இப்பகுதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
தொடரும் திருட்டு
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுகள் நடந்து ஏராளமான நகைகள், ரொக்கம் திருடு போயுள்ளது. இதுவரை ஒரு சம்பவத்தில் கூட யாரையும் போலீஸார் கைது செய்யாத நிலையே தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT