Published : 07 Oct 2024 12:03 AM
Last Updated : 07 Oct 2024 12:03 AM

அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் வருகை: ஆட்சியர், அரசு அதிகாரிகள், கட்சியினர் சந்திப்பு

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் வருகை தந்தார். அவரை ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினர் சந்தித்தனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி 471 நாட்களுக்கு கடந்த செப்.26 பிணையில் விடுதலையானார். இதையடுத்து அவருக்கு அமைச்சரவையில் அவர் ஏற்கனவே கவனித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் வழங்கப்பட்டன.

அக்.3-ம் தேதி கரூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்கிறார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்த நிலையில் அன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) திருச்சி வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி திருச்சியில் இருந்து கார் மூலம் கரூர் வந்தார். குளித்தலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் அருகேயுள்ள மண்மங்கலத்தில் உள்ள அவரது குல தெய்வமான புதுகாளியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள பயணியர் விடுதிக்கு மாலை 6.02 மணிக்கு வந்தார்.

ஏற்கனவே அங்கு காத்திருந்த ஆட்சியர் மீ.தங்கவேல் பூங்கொத்து மற்றும் நூல் கொடுத்து வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா ஆகியோர் பூங்கொத்து மற்றும் நூல்கள் கொடுத்து வரவேற்றனர். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ், தொழிலதிபர் நாச்சிமுத்து உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்தனர்.

தொடர்ந்து மாலை 7.37 நிமிடம் வரை 95 நிமிடங்கள் அதிகாரிகள், கட்சியினரை செந்தில்பாலாஜி சந்தித்தார். அதன் பிறகு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் செந்தில்பாலாஜி வருகையையொட்டி திருமாநிலையூர், பயணியர் விடுதி முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கான கட்சியினர் அங்கு திரண்டதால் வடக்கு பிரதட்சணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணியர் விடுதியில் தொண்டர்கள் முண்டியடித்ததால் நுழைவாயில் கதவின் தானியங்கி சேதமடைந்தது. செந்தில்பாலாஜியை சந்தித்த பலரும் மரியாதை நிமித்தமாக சால்வையுடன் சந்தித்ததால் பயணியர் விடுதி உள்ளேயே சால்வை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x