Last Updated : 06 Oct, 2024 09:19 PM

 

Published : 06 Oct 2024 09:19 PM
Last Updated : 06 Oct 2024 09:19 PM

Chennai Air Show ஹைலைட்ஸ்: மெரினாவில் மக்கள் வெள்ளம் முதல் ‘லிம்கா’ சாதனை வரை!

படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமான விமான வான் சாகசக் காட்சி நடைபெற்றது. 72 விமானங்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 15 லட்சம் பேர் பார்த்ததன் மூலம் இந்நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தற்போது விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விமானப் படையின் திறமையை பறைசாற்றும் வகையிலும், விமானப் படையில் இளைஞர்கள் சேர ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் விமானப்படை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் இந்த வான் சாகச நிகழ்ச்சி டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்தது. டெல்லிக்கு வெளியே சண்டிகரில் முதல் முறையாக கடந்த 2022-ம் ஆண்டும் மற்றும் உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது ஆண்டாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, சென்னையில் 3 நாட்கள் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, பிரதான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. இந்த விமானங்கள் தாம்பரம், அரக்கோணம், தஞ்சாவூர், கோவை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் இருந்து இயக்கப்பட்டன.

முதல் நிகழ்வாக, ஆக்ரா விமான பயிற்சி பள்ளியைச் சேர்ந்த ஆகாஷ் கங்கா அணியைச் சேர்ந்த பாராசூட் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். அதற்கடுத்ததாக, எம்ஐ-70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 காமாண்டோ வீரர்கள் குதித்து, அங்கு ஒரு கட்டிடத்தில் எதிரிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளை மீட்கும் சாகசத்தை நிகழ்த்தினர்.

அடுத்த நிகழ்வாக, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இலகு ரக சேட்டக் ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்தனர். அடுத்ததாக, இந்திய விமானப் படையின் நவீன போர் விமானமான சூப்பர்சானிக் ரஃபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி அதிரடி சாகசத்தில் ஈடுபட்டது. இதைக் கண்ட பார்வையாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, இந்திய விமானப் படையின் பழமையான விமானமான டகோட்டா, ஹார்வர்டு விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்த விமானங்கள் 1947-89ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் படையில் சேர்க்கப்பட உள்ள எச்டிடி-40 என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக் கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. 4-வது தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000 போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக போர் விமானம் தேஜஸ் போர் விமானம் வானில் குட்டிக் கரணம் அடித்தும், செங்குத்தாக பறந்தும், பின்னால் சென்றபடி என பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

அதேபோல், மிகப் பெரிய போர் விமானமான ஹாக் எம்கே-132 விமானத்தை பின்தொடர்ந்து விமானத்தில் வந்த சூர்யகிரன் ஏரோபாடிக் டீம் வானில் சாகசத்தில் ஈடுபட்டன. இந்த சாகசத்தில் ஈடுபட்ட 9 விமானத்தில் ஒரு விமானத்தை சென்னையை சேர்ந்த அஜய் என்ற விமானி இயக்கினார். இந்த விமானங்கள் வானில் ஏரோடைனமிக் சாகசத்தில் ஈடுபட்டன.

குறிப்பாக, மெதுவான வேகத்தில் வானில் ஒரே இடத்தில் நிற்பது, குட்டிக் கரணம் அடிப்பது உள்ளிட்ட சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன், மூவர்ண நிறத்தில் புகையை கக்கியபடி சாகத்தில் ஈடுபட்டன. அத்துடன், வானில் புகையை கக்கியபடி இதயம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தியது அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்டது.

அடுத்ததாக, சாரங் ஹெலிகாப்டர்களின் ஏரோபாடிக் சாகசம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் பங்கேற்ற 5 ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டரை தமிழகத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணா, அவினாஷ் ஆகிய இரு விமானிகள் இயக்கினர்.

வான் நடனத்தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர்கள் இரு திசைகளில் இருந்து ஒரே சமயத்தில் எதிரும் புதிருமாக வந்து மோதுவது போல் சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இதன் மூலம், இந்நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. மேலும், இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியை, இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள், அமைச்சர்கள், விமானப் படை பயிற்சி பிரிவு தளபதி ஏர்மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப் படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப்படை தளபதி ரதீஷ் குமார், முப்படை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 2 மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் அதிருப்தி: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் படையெடுத்ததால், மின்சார, மெட்ரோ ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையின் பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசும், ரயில்வே துறையும் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். | விரிவாக வாசிக்க > சென்னை விமான சாகச நிகழ்ச்சி - தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x