Published : 06 Oct 2024 06:18 PM
Last Updated : 06 Oct 2024 06:18 PM

சென்னை விமான சாகச நிகழ்ச்சி - தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

வான் சாகச நிகழ்ச்சி

சென்னை: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் படையெடுத்ததால், மின்சார, மெட்ரோ ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையின் பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசும், ரயில்வே துறையும் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய விமானப்படை 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைக்கொண்டாடும் வகையில், மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப்படை அழைப்பு விடுத்தது. 15 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்ப்பு தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து மூலமாக இன்று காலை 7 மணி முதல் சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத்தொடங்கினர். அதிலும், சென்னை மற்றும் புறநகரில் இருந்து மின்சார ரயில்களில் சென்னை கடற்கரைக்கு வந்த மக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல் , வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, சிந்தாதிரிபேட்டை, திருமயிலை, வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பிவழிந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் வான்சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு, வீட்டுக்கு திரும்பினர்.

இது குறித்து கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர் எஸ். அனுராதா கூறியதாவது: காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினேன். போக்குவரத்து நெரிசலால், வேளச்சேரியை அடைய 10 மணி ஆகிவிட்டது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் டிக்கெட் பெறுவதற்கு மக்கள் 3 கி.மீ. வரை நின்று கொண்டிருந்தனர். ஒருவழியாக மொபைல் செயலி மூலமாக டிக்கெட் எடுத்து, ரயில் நிலையத்தின் நடைமேடையில் நுழைவாயிலுக்கு வந்தால், கால் வைக்க முடியாக அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. போதிய மின்சார ரயில் இயக்கப்படவில்லை. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. இதனால், வான்வெளி சாகசத்தை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ ரயில்களில் கூட்டம்: மின்சார ரயிலைப்போல், மெட்ரோவிலும் குறி்ப்பாக சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் இன்று காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. விமானநிலையம், ஆலந்தூர், கிண்டி, அரசினர்தோட்டம், சென்ட்ரல் உள்பட முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது .மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ‘ க்யூஆர்’ கோடு மூலமாக டிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

சாலை போக்குவரத்து நெரிசல்: சென்னையின் பல்வேறு சாலைகளிலும் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் பயணம் செய்த பலர், வேறு வழியின்றி பாதி வழியிலேயே வீடு திரும்பினர். போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததும், உரிய திட்டமிடல் இல்லாததுமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டினர்.

வீடு திரும்புவதிலும் சிக்கல்: ரயில் மற்றும் சாலை போக்குவரத்து நெருக்கடிகளைத் தாண்டி மெரினா கடற்கரைக்குச் சென்று விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்களுக்கு மீண்டும் வீடு திரும்புவது பெரும் சாதனையாக இருந்தது. மக்களின் வசதிக்காக, வண்ணாரப்பேட்டை - ஏஜி டிஎம்எஸ் மார்க்கத்தில் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் திரும்பியபோது, அரசினர் தோட்டம், எல்ஐசி, சென்ட்ரல் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மற்ற இடங்களில் இருந்து குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களுக்கு இன்று மதியம் வந்த மக்கள், நிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். எஸ்கலேட்டர்கள், ஸ்கேனர்கள் இயங்காததால் மெட்ரோ ரயில் ஊழியர்களும் ஸ்தம்பித்து நின்றனர். இதையடுத்து, வெளியேறும் பகுதிகளில் டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரம் நிறுத்தப்பட்டது. மாலை வரை மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் இந்த கூட்ட நெரிசல் நீடித்தது. விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று அறிந்தும், தமிழக அரசும், ரயில்வே துறையும் இணைந்து ஆலோசித்து, போதிய மின்சார ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x