Last Updated : 22 Jun, 2018 05:11 PM

 

Published : 22 Jun 2018 05:11 PM
Last Updated : 22 Jun 2018 05:11 PM

சேலம்- சென்னை பசுமைவழிச் சாலை; மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஆட்சியர் ரோகிணி

சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச் சாலைக்காக குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு 21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை வழங்கப்படும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச் சாலை பணிக்காக பூர்வாங்க நடவடிக்கையில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பசுமை வழி சாலைக்கான எல்லையை வரையறு செய்து, முட்டுக்கல் நடும் பணி நடைபெற்று வருகிறது. பசுமை வழி சாலை திட்டம் குறித்து பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழில் மேம்பாடு அடையும். பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளிப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆட்சேபனை செய்கின்றனர். மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிமீ தொலைவு அமைகிறது. 186 ஹெக்டேர் பட்டா நிலம், 46 ஹெக்டேர் தரிசு நிலம், 16 ஹெக்டேர் வனப்பகுதி பசுமை வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 853 பட்டாதாரர்கள் உள்ளனர். தற்போது வரை 18 கிமீ தொலைவு, 26 ஹெக்டேர் நிலம் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு மாற்று பட்டா வழங்கி, அவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எட்டு வழி சாலையின் குறுக்கே யாரும் செல்ல முடியாது. சாலையின் இருபுறம் ஊர்களின் போக்குவரத்து துண்டிக்கப்படும் என பல தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். அதுபோல் எல்லாம் இல்லை. கோயில், மசூதி, தேவாலயங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதற்கு மாற்று இடம், சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

இழப்பீடு தொகை அதிகரித்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இருந்ததை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க தெரிவித்துள்ளார். மேலும், கையகப்படுத்தும் இடத்தில் உள்ள வீடு, பண்ணை, கொட்டகை, கிணறு, பெட்டி கடை உள்ளிட்டவை மதிப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்கப்படும்.

ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் குறைந்தபட்மாகவும், சந்தை மதிப்புக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். நிலம் அளிப்பவர்களின் வாரிசுகளுக்கு தொழில் கல்வி, தாட்கோ, வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பசுமை வழி சாலை திட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x