Published : 06 Oct 2024 03:51 PM
Last Updated : 06 Oct 2024 03:51 PM
கோவை: இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால், ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர். துறவு என்பது தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது. துறவு என்பது இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கம். கோவை ஈஷா யோக மையத்தில் துறவிகளாக உள்ள, தனது இரு மகள்களை மீ்ட்கக்கோரி, பேராசிரியர் காமராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், ஈஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து காணொலி காட்சி மூலம் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, 'தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே துறவிகளாக இருக்கிறோம்' என இருவரும் தெரிவித்தனர். உண்மையை தெரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமே நடத்துவதாக அறிவித்தது. தற்போது, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்து மதத்தின் ஓர் அங்கம் தான் துறவு. ஈஷா யோக மையம் கோவை, தமிழகம் ஏன் இந்தியாவை தாண்டி உலக அளவில் முக்கியமான ஆன்மிக மையமாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைவர் சத்குரு. ஆன்மிகம் மட்டுமல்லாது, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சேவை பணிகளில் ஈஷா யோக மையம் ஈடுபட்டுள்ளது.
ஈஷா யோக மையத்தையும், அதன் நிறுவனர் சத்குரு அவர்களை நோக்கியும் பல லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுவது, இந்து மத எதிர்ப்பாளர்கள், பிரிவினைவைாதிகளின் கண்களை உறுத்துகிறது. அதனால்தான் ஈஷா யோக மையம் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
மற்ற மத நிறுவனங்கள் மீது எத்தனை எத்தனையோ புகார்கள் வருகின்றன. அங்கெல்லாம் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் மதமாற்றம் பெரும் வணிகமாக நடக்கிறது. அவர்கள் மீதெல்லாம் புகார் அளித்தாலும் திமுக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT