Published : 06 Oct 2024 03:43 PM
Last Updated : 06 Oct 2024 03:43 PM

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த வான் சாகச நிகழ்ச்சி - சாதனையும் சறுக்கலும்

சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று (அக்.6) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. என்றாலும் நிகழ்ச்சிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி மற்றும் முறையான திட்டமிடல் இல்லாதததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலர் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (6-ம் தேதி) மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், விமானப் படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஏ.பி.சிங், விமான பயிற்சிப் படைப்பிரிவு தளபதி மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப்படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப் படைத் தளபதி ரதீஷ் குமார் உள்ளிட்டோருடன் லட்சக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.

லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த சாகசம்: சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட வர வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

நிர்வாகத் தோல்வியும் மக்களின் ஏமாற்றமும்: கொண்டாட்டங்களில் எப்போதும் குதுகலத்துடன் கலந்து கொள்ளும் சென்னைவாசிகள் இந்த வான் சாகச நிகழ்ச்சிக்காக காலை 7 மணி முதலே மெரினாவில் குவியத்தொடங்கினர். நேரம் செல்ல செல்லச் செல்ல அண்ணா சாலையில் மெரினாவை ஒட்டியப் பகுதிகளில் வாகனங்கள் தேங்கத் தொடங்கி நெரிசல் உருவாகத் தொடங்கியது. 9.30 மணியைக் கடந்ததும் அண்ணா சாலையின் பாதிவரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதேபோல், மெரினா நோக்கிச் செல்லும் சென்னை பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால், பல மணி நேரம் வாகனங்கள் சாலைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் எல்.பி. சாலையில் மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாக மெரினாவுக்குச் செல்லும் முடிவை கைவிட்டு வீடு திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலுக்கு போக்குவரத்து காவல்துறையின் திட்டமிடல் இன்மையே காரணம் என பாதிக்கப்பட்ட பயணிகள் பலரும் குற்றம் சாட்டினர்.

பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ள வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், மைலாப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதே சவாலாக இருந்ததால் பலர் திரும்பிவிட்டனர். ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடமின்றி பலர் திரும்பிச் சென்றனர். அங்கும் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்பட்டது.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டலை: வான் சாகசநிகழ்ச்சியை பார்க்க முடியாத ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்ட கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியல் அனுராதா கூறுகையில், "கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் நான், ஒன்பது மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பி, பள்ளிக்கரணை தொடங்கிய போக்குவரத்து நெரிசலில் நீந்தி, வேளச்சேரி சென்று அடைவதற்குள் 10 மணி ஆகிவிட்டது. வேளச்சேரி பறக்கும் ரயிலில் டிக்கெட் பெறுவதற்கான வரிசை, பார்க்கிங் area வையும் தாண்டி, கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டருக்கு நின்று கொண்டிருந்தது.

ஒருவழியாக மொபைல் app இல் டிக்கெட்டை எடுத்து, நடைமேடைக்கு சென்று ரயிலை பிடிக்கலாம் என்று நினைத்தால், நடைமேடையில் கால் அடி கூட வைக்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருந்தது. பறக்கும் ரயில் வழக்கம் போல 30 நிமிடத்திற்கு ஒரு வண்டி தான் விடப்பட்டது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான எந்த முன்னேற்பாடுகளும் ரயில்வே நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் செய்யவில்லை என்பது வேதனைக்குரியது. எப்படியாவது வான்வெளி சாகசத்தை கண்டு களிக்க வேண்டும் என்ற என்னுடைய எதிர்பார்ப்பு இந்த கொளுத்தும் வெயிலில் கரைந்து போனதுதான் சோகம்" என்றார்.

"இந்திய விமானப் படை ஒரு சாகச நிகழ்ச்சி நடத்துகிறது என்றால், அதற்கு காவல்துறை, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட பிற துறைகளும் போதிய ஒத்துழைப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், மாநில அரசின் துறைகள் இந்த நிகழ்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் அளித்ததாகத் தெரியவில்லை" என பிரியதர்ஷினி என்ற ஏமாற்றமடைந்த பயணி வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த வான் சாகச நிகழ்ச்சி பொதுவாக டெல்லியில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். டெல்லிக்கு வெளியே சண்டிகரில் 2022-ம் ஆண்டும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றன. மூன்றாவது ஆண்டாக சென்னையில் தற்போது நடைபெற்றது.

இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6,500 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x