Published : 06 Oct 2024 02:38 PM
Last Updated : 06 Oct 2024 02:38 PM
சென்னை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்க்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் உள்ள அணைகளிலிருந்து ஆங்காங்கே உள்ள கால்வாய்களில் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அந்த வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேற்படி கால்வாய்களில், பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் தாலுக்காக்களுக்கு உட்பட்ட 4,614 ஏக்கர் நிலமும்; பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், தேனி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள 5,146 ஏக்கர் நிலமும் என மொத்தம் 9,760 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று தெரிவித்த அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
2023 ஆம் ஆண்டு, தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்த்தும், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம், பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த ஆண்டும், டிசம்பர் மாதம் தான் மேற்படி கால்வாய்களுக்கு அரசு தண்ணீர் திறந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடையே நிலவுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment