Published : 06 Oct 2024 10:02 AM
Last Updated : 06 Oct 2024 10:02 AM
’அக்டோபர் 2-ம் தேதி விசிக மது ஒழிப்பு மாநாடு நடைபெறும்’ என்னும் அறிவிப்பு வெளியானது முதலே கடந்த ஒரு மாதமாக விசிகவைச் சுற்றியே தமிழக அரசியலில் பேச்சுகள் இருந்தது என சொல்லலாம்.
முதல் சர்ச்சை: மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “யார் வேண்டுமானாலும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” எனக் கூறினார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், “அதிமுக இந்த மாநாட்டில் பங்கேற்பார்களா? அழைப்பு இருக்குமா?”என்னும் கேள்வியை முன் வைத்தார். இதற்கு திருமாவளவன் ’அதிமுகவும் பங்கேற்கலாம்’ என கூறியது திமுக - விசிக கூட்டணியில் விரிசல் என்னும் பேச்சுக்கு தூபம் போட்டது.
ஆனால், ”மது ஒழிப்பு மாநாடு என்பது தேர்தல் கணக்கு அல்ல. இது மக்களின் நலன் சார்ந்தது. கூட்டணிக்கும் இதற்கும் தொடர்பு அல்ல” என விளக்கம் அளித்தார் விசிக தலைவர் திருமாவளவன். எனினும் ஓயாத சர்ச்சை காரணமாக திமுக - விசிக கூட்டணியில் விரிசல் என்னும் பேச்சு அடிபட்டது. மேலும் இதனை வலுப்படுத்தும் வகையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என திருமாவளவன் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. பின் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்.
ஆனால், மீண்டும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் துணை முதல்வர் ஆகும்போது 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா” எனப் பேசியதும், ‘திமுகவின் தேர்தல் வெற்றியில் விசிகவின் பங்கு அதிகம் இருக்கிறது” என்றும் பேசியவை சர்ச்சையானது.
விசிகவின் முதன்மை நிர்வாகிகள் இதனை எதிர்த்தாலும் தலைவரான திருமாவளவன் இதற்கு பெரிதாக ரியாக்ஷன் ஏதும் கொடுக்கவில்லை. ’தலித் முதல்வராக வேண்டும்’ என இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒருவர் வைக்கும் கோரிக்கையாகவே இது பார்க்கப்பட்டு அது நகர்த்தி வைக்கப்பட்டது. ஆனால், மாநாடு நடந்த பிறகாவது சர்ச்சை ஓயுமா? என்றால் அதன்பின் தான் அடுத்தடுத்த சர்ச்சைகள் எழுகிறது.
1. தமிழிசை vs திருமாவளவன்: அக்டோபர் 2-ம் தேதி மாநாட்டிற்கு செல்லும் முன்பு, திருமாவளவன் காமராஜரின் நினைவு நாளை ஒட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு “மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை முன்வைத்திருந்தார். இதற்கு மாநாட்டு மேடையில் பதிலளித்த திருமாவளவன், “காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது நாள்தோறும் மது அருந்துவேன் என்று முன்னாள் தமிழிசை சொல்வதாகத் தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரைப் போல் எனக்கும் அந்தப் பழக்கம் கிடையாது,” என தெரிவித்திருந்தார்
பெண் தலைவருக்கு எதிராக இப்படியான சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு பாஜகவை சேர்ந்த பலர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் திருமாவளவன், “அவர் பேசியது என்னை புண்படுத்தாதா? நான் பேசியது அவரைக் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” எனப் பேசினார். ஆனால், ”திருமாவளவனின் வக்கிரதன்மையின் அடையாளமாக இந்தப் பேச்சைப் பார்க்கிறேன்” என தமிழிசை விமர்சித்தார். இப்படியாக, தமிழிசை vs திருமாவளவன் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.
2. ராஜாஜி கட் அவுட் சர்ச்சை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி கட் அவுட் பேசு பொருளானது. ராஜாஜியைத் தமிழக மக்களுக்கு காங்கிரஸ்காரராகவும் குலக்கல்வி கொண்டுவந்ததால் பெரியார் அவரை எதிர்த்ததாகவும் மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், ராஜாஜிக்கும் மதுவிலக்கும் தொடர்புகள் உள்ளது.
அந்த வரலாறு என்ன? - இந்தியாவில் முதன்முதலாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது தமிழகத்தில். குறிப்பாக சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் ராஜாஜி. சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்றார் ராஜாஜி. அப்போது அவர் முதல் திட்டமாக மது விலக்கை கொண்டுவருவதில் ஆர்வம் செலுத்தினார். அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்த சர்ச்சைக்கு மாநாட்டிலேயே விதிருமாவளவன் பதிலளித்திருந்தார். அவர், “ காந்தி கொள்கையில் பலவற்றில் முரண்பாடு உண்டு, ஆனால் உடன்பாடுள்ள இரண்டு கொள்கை மதுவிலக்கு, மதச்சார்பின்மை. அதேபோல், மதுவிலக்கு கொள்கை பேசிய ராஜாஜிக்கு மாநாட்டில் பேனர் வைத்துள்ளோம்” என விளக்கமளித்தார்.
3. வெறும் கோரிக்கை மாநாடு: மது ஒழிப்பு மாநாட்டில் ஆளும் திமுகவை டார்கெட் செய்து பேசுவார் திருமாவளவன் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கள்ளச்சாராய மரணங்கள் என மது தொடர்பான பிரச்சினைகளை மக்களின் குரலாக மேடையில் ஒலிப்பார் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், அனைத்து மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை. அதனால் இந்தியா முழுவதிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய பாஜகவுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், ஆளும் அரசிடமும் மதுக்கடைகளை மூட கால அட்டவணை, மதுவிலக்கை கொண்டுவர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என கோரிக்கைகளாக தீர்மானங்கள் மாறியதும் விமர்சிக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக தான் இந்த மாநாடு தேர்தல் கணக்கு இல்லை என்றார் திருமாவளவன். ஆனால், ஆளும் திமுகவை ஆதரிக்கும் நோக்கில்தான் மாநாட்டில் பேசினார் என்னும் விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் “ முதல்வர் ஸ்டாலிக்கும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் விருப்பம்” எனப் பேசியதைச் சொல்லலாம்.
4. டார்கெட் அதிமுக : அதிமுகவும் பங்கேற்கலாம் எனக் கூறிய திருமாவளவன் “மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கவும் அது நிறுவனமாக வளர காரணமாக அமைந்தது அதிமுக ஆட்சியில் தான் எனக் குற்றச்சாட்டை முன்வைத்ததும் கேள்விகளை எழுப்பியது. ஆனால், சுதந்தர இந்தியாவில் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. அதன்பின் அண்ணா ஆட்சிக் காலத்தில் மதுக்கடைகளைத் திறந்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும் என அதிகாரிகள் சொன்னபோதும் அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஆனால், அண்ணா இறப்புக்குப் பின் 1971-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தி உத்தரவிட்டார். பின்னர் திமுக ஆட்சியிலேயே 1974-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், அதிமுக ஆட்சியில் 1981-ம் ஆண்டு மதுவிலக்கு நீக்கப்பட்டது. ஆனால், அதன்பின் பல முறை திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது. எனினும், மதுக்கடைகள் அனைத்தும் செயல்படுவதற்கு முக்கியமான காரணம் அதிமுக தான் என்பது போலவும் ஆளும் அரசின் நடவடிக்கை குறித்து பேசாமலும் அதிமுகவை திருமாவளவன் குறிவைத்தது தேர்தல் கூட்டணி கணக்கு இல்லாமல் வேறு என்ன? என்பதைப் பலரும் கேள்விகளாக எழுப்புகின்றனர்.
5. திருமாவளவன் vs ஆர்.எஸ்.பாரதி: மதுவிலக்கு மாநாட்டில் பேசிய திருமாவளவன், ”இங்கு இருந்து செல்பவர்கள் 10 பேரையாவது குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்” என உறுதி கொள்ள வேண்டும் என்றார். அதன் பின் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”குடிப்பழக்கத்தை விட்டுவிட்டால் கடைகள் தானாக மூடும்” எனப் பேசினார். எனவே, திருமாவளவனின் பேச்சும் அதற்கான ஆர்.எஸ்.பாரதி எதிர்வினையும் மாநாட்டின் நோக்கத்தையே மாற்றிவிடும் வகையில் இருந்ததும் பேசுபொருளானது.
இப்படியாக, விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என்பது அக்கட்சிக்கு சில நெருக்கடிகளைத் தான் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கணக்கு எதுவும் இல்லை என தொடங்கிய மாநாட்டில் திமுகவுக்கு ஆதரவாக மட்டுமே திருமாவளவன் பேசியது அதன் திசையை மாற்றியுள்ளது. ஆகவே, மது ஒழிப்பு என்னும் மாநாடு விசிகவுக்கு மைலேஜ் கொடுக்குமா, மக்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம் பொறுத்திருந்து...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT