Published : 06 Oct 2024 09:52 AM
Last Updated : 06 Oct 2024 09:52 AM
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைப்புக் குழு இதுவரை கட்சியின் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி, சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திமுக தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் மருத்துவர் அணி, மீனவர் அணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகள் குறித்தும் அப்போது ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதிருந்தே பணிகளை தொடங்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.குறிப்பாக, சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை, அம்மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT