Published : 05 Jun 2018 08:45 AM
Last Updated : 05 Jun 2018 08:45 AM
கிருஷ்ணகிரி அணையில் நாளை (6-ம் தேதி) புதிய மதகு அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால், அணையில் இருந்து 1,360 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் 8 பிரதான மதகுகளும், 3 சிறிய மதகுகளும் உள்ளன. இவற்றில் முதல் மதகின் ஷட்டர் கடந்த ஆண்டு நவ.29-ம் தேதி உடைந்தது. இதனால் அணையில் இருந்து சுமார் 1.4 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ரூ.30 லட்சம் மதிப்பில் 12 அடிக்கு தற்காலிக மதகு அமைக்கப்பட்டது. இதன்மூலம் அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைக்கப்பட்டது. இதனிடையே அணையில் உள்ள அனைத்து மதகுகளையும் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கோடை காலத்தில் மதகு மாற்றியமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை (6-ம் தேதி) புதிய மதகு அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக அணையில் இருந்து 3 சிறிய மதகுகள் வழியாக விநாடிக்கு 1,360 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் தென்பெண்ணை ஆற்றிலும், இடது மற்றும் வலது பாசன கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறும்போது, “சுமார் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கும் பணிகள் நாளைதொடங்கப்படும். இதற்கான தளவாடங்கள் திருச்சியில் இருந்து இன்று மாலைக்குள் வந்தடையும். ஒப்பந்த காலம் 3 மாதங்கள் என்றாலும், 40 நாட்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
நீர்வரத்து அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 37.30 கனஅடியாக உள்ளது. மதகு பொருத்தும் பணிக்காக 31 அடிக்கு கீழ் நீர் குறைக்க வேண்டும். பிரதான மதகுகள் வழியாக இரவில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT