Published : 05 Oct 2024 09:34 PM
Last Updated : 05 Oct 2024 09:34 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் சொத்துக்களை மீட்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக பெரம்பலூர், திருநெல்வேலி, காரைக்கால், சேலம் என தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் இவை தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது.
அதேபோல சிதம்பரத்தில் மாணிக்கவாசகரால் தொடங்கப்பட்ட குரு நமச்சிவாய மடத்துக்கு சொந்தமான சொத்துக்களும் மாயமாகி வருகின்றன. இந்த மடத்துக்கு சொந்தமான நிலங்களில் தற்போது 87 வீடுகளும், பள்ளிக்கூடமும் உள்ளது என்றாலும் மடத்தின் செயல்பாடுகளுக்கோ, வளர்ச்சிக்கோ எந்த பலனும் இல்லை. இந்த மடத்துக்கு சொந்தமான சொத்துக்களை அளவிட ஏற்கெனவே மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அந்த சொத்துக்களை அதிகாரிகள் அளவிடவில்லை. எனவே சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் குரு நமச்சிவாய மடத்துக்கு சொந்தமான மீட்டு அவற்றை முறையாக பராமரி்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். மருதாச்சலமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மனுதாரர் கோரியுள்ள சிதம்பரம் நடராஜர் மற்றும் குரு நமச்சிவாய மடத்துக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க 12 வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT