Published : 24 Jun 2018 06:33 PM
Last Updated : 24 Jun 2018 06:33 PM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விஜயரங்கன் (46).காங்கிரஸ் பிரமுகரான இவர், பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருவதோடு, வட்டித் தொழிலும் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு, பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, காமராஜர் நகரில் வட கைலாசம் கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது, அவரது பைக்கைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், விஜயரங்கனின் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் தடுமாறி விழுந்த விஜயரங்கரனை, மர்மநபர்கள் தாக்கியதோடு, தொடர்ந்து வந்த ஒரு காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் இதைக் கண்ட சிலர், விஜயரங்கனின் சகோதரர், விஜயராகவனுக்கு தகவல் அளித்துள்ளனர்.இதையடுத்து அவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை விஜயரங்கன், பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருப்பது அறிந்து போலீஸார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என தனக்குத் தெரியாது எனவும், இரவு கடத்திச் சென்று ஒரு மோட்டார் கொட்டகையில் தங்க வைத்திருந்தனர் எனவும், பின்னர் அங்கிருந்து மற்றொரு வீட்டிற்குக் கொண்டு சென்று, காலை உணவு மட்டும் வழங்கினர்.
இதையடுத்து தலையில் தாக்கியதால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிக்க ஒரு கம்பவுண்டரை மட்டும் வரவழைத்து மருந்திட்டனர். பின்னர் கண்ணைக் கட்டி, குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரிக்கரை கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றதாகவும், அவ்வழியே வந்த பண்ருட்டி நபர் என்னை அடையாளம் கண்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்துவிட்டதாகவும், தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன் என்றும் விஜயரங்கன் தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் அவர்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எதற்காக கடத்தினார்கள் என்றும் தெரியவில்லை என்று விஜயரங்கன் கூறினார்.இதையடுத்து அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT