Published : 05 Oct 2024 09:15 PM
Last Updated : 05 Oct 2024 09:15 PM
சென்னை: இயலாமைக்கான சான்றிதழை சமர்ப்பிப்போருக்கு மட்டுமே இலகுப் பணி வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட கனரக பணிகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு நேரக் காப்பாளர், தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்டவற்றில் இலகுப் பணிகள் வழங்கப்படுகின்றன. இதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அதிகாரிகளுக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இலகுப் பணி கோரும் பணியாளர்களை நிர்வாக துணைக் குழுவின் முன் நேரில் ஆஜர்படுத்தி சிகிச்சை பெற்று வரும் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் பணியாளரின் உடல்நிலைக்கேற்ப துணை குழு பரிந்துரையின் பேரில் தற்காலிகமாக மாற்றுப் பணி வழங்கப்படுகிறது.
தற்போது போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இயலாமைக்கான சான்றிதழை தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கும் பணியாளர்களுக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்படி மாற்றுப் பணி வழங்கப்படும். மேலும், மற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மாற்றுப் பணி கோரும்போது சூழ்நிலைக்கேற்ப வழங்க பரிசீலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT