Last Updated : 05 Oct, 2024 09:14 PM

 

Published : 05 Oct 2024 09:14 PM
Last Updated : 05 Oct 2024 09:14 PM

எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் - மருத்துவ மாணவி அசத்தல்

சென்னை: மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பயன்பெறுவதற்காக முதுநிலை மருத்துவ மாணவி மருத்துவர் வித்யா இதை உருவாக்கியுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கீழ் எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமன மற்றும் திருவல்லிக்கேணியில் அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் தினமும் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு உதவிடும் வகையில் இரண்டு மருத்துவமனைகளுக்கும் சேர்த்து www.iogkgh.org.in என்ற இணையதளம் மற்றும் இணையதளதுக்குள் செல்வதற்கான கியூ ஆர் கோடை முதுநிலை மகப்பேறு மருத்துவம் படிக்கும் மருத்துவர் வித்யா உருவாக்கியுள்ளார்.

அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் பணியாற்றி வரும் அவர், இன்று கியூ ஆர் கோட் அட்டையை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் காண்பித்தார். அவர் இணையதள பயன்பாட்டை தொடங்கி வைத்தார். எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமன இயக்குநர் குப்புலட்சுமி, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் சுமதி, மகப்பேறு மருத்துவர் கண்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த இணையதளம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் வித்யா கூறியது: “மகப்பேறுயியல் மருத்துவம் என்பது ஒரு பெண் கருத்தரிப்பில் தொடங்கி, கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்புக்கு பின்னரான காலம் என ஒரு நீண்ட பயணத்தைக் கொண்டது. அந்த காலகட்டங்களில் ஒரு தாய்க்கு ஏற்படும் சிக்கல்கள் அதிகம். ஒரு தாய் கருவுற்ற முதல் நாளில் இருந்து அவள் குழந்தையைப் பெற்றெடுத்து 6 மாதங்கள் வரை ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இப்படி தாயையும் குழந்தையையும் காக்கும் பொறுப்பு ஒரு மகப்பேறு மருத்துவருக்கு அதிகம் உண்டு. தாய்மார்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் விளைவுகளை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு தானே முதன்மையான மருத்துவர் என்பதை கவனிக்க வேண்டும். தன்னையும் தன் குழந்தையையும் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஓர் ஆரம்பமாகவே நாங்கள் எங்கள் மருத்துவமனைக்கு இணையதளத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த இணையதளத்துக்குள் செல்ல ஒரு கியூ ஆர் கோட் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரியுடன் கூடிய கியூ ஆர் கோட் அட்டை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் ஒட்டப்படும். கர்ப்பிணிகளோ அல்லது அவர்களின் உறவினர்களோ கியூ ஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்து, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் தேவையான தகவல்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இந்த இணையதளத்தைத் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையதளம் கண்டிப்பாக தாய்மார்களுக்கு பயனளிக்கும். இணையதளத்தில் கர்ப்ப காலம் உடற்பயிற்சி, யோகா செய்வதன் பயன் குறித்து புகைப்படங்களும் வீடியோக்களும், இசையும் சேர்க்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x