Published : 05 Oct 2024 03:55 PM
Last Updated : 05 Oct 2024 03:55 PM
நாகப்பட்டினம்: முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் இன்று இசிஆர் சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார் ஓ.எஸ்.மணியன்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்புலம் பகுதியைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், இன்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர் அருகே அவரது கார் சென்றபோது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் அதை தாறுமாறாக ஓட்டி வந்ததாகத் தெரிகிறது. அப்படி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் காரை வேகமாக திருபியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோயில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்த நிலையில் ஓ.எஸ்.மணியனும் அவரது கார் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லேசான சிறு காயத்தோடு அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT