Published : 05 Oct 2024 01:56 PM
Last Updated : 05 Oct 2024 01:56 PM
சென்னை: சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4 வாரங்களாக காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை, எழும்பூரில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதாக காவல்துறை மற்றும் தொழிலாளர் துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசு தலையிட்டு தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: “சாம்சங் நிர்வாகத்தின் கடைக்கண் பார்வையில் கூட கோபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் தமிழக அரசும், காவல்துறையும் நமது ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. இப்பிரச்சினையில் திமுக அரசு, சாம்சங் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கிறது. தொழிலாளி உரிமையை அளிக்க திமுக அரசு மறுத்ததை எதிர்த்து தமிழகமே போராடுகிறது என்ற நிலைக்கு முதல்வர் இடமளிக்கக் கூடாது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிபணிந்து மக்கள் இருக்க வேண்டுமானால் தமிழக மக்களின் உரிமையை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்? அடக்குமுறையை முதல்வர் ஏவக்கூடாது. அடக்குமுறை மூலம் வெற்றி பெற முடியும் என்றால் திமுகவே அரசியலில் இடம்பெற்றிருக்க முடியாது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.” என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
“தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க அரசுகள் இருந்த மாநிலத்தில், தொழிற்சங்கம் வைக்கக் கூடாது என நிறுவனம் செய்யும் அடாவடித்தனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஆதரவளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை என நடு இரவில் சொல்வது ஏற்புடையதல்ல. இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடைபெறுகிறதா அல்லது அவருக்கு தெரியாமல் அதிகாரிகள் முடிவெடுக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் முதல்வருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. சாம்சங் நிறுவன பிரச்சினையில் அவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
“சாம்சங் பிரச்சினையில் காவல்துறை தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது. தொழிலாளர் துறை ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவளிக்கிறது. தமிழக அரசோ மவுனம் காக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தொழிற்சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும்.” என சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
வைகோ கண்டனம்: இந்த பிரச்சினை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண சாம்சங் நிறுவனத்தை அரசு அறிவுறுத்த வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை தமிழக தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 2 Comments )
அந்த நிறுவனம் நல்ல ஊதியம் கொடுத்து வருவதாக அதில் வேலை செய்யும் நண்பர்கள் கூறுகின்றனர். இறுதியில் நடக்க போவது கம்யூனிஸ்ட் கட்சிகள் நுழைந்து, நிர்வாகம் கதவடைப்பை செய்ய வைக்க போகிறார்கள். தொழிலாளர்கள் வேலை இழந்து நடு தெருவுக்கு வர போகிறார்கள். ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்டுகள் நுழைந்த தொழில் நிறுவனமும் உருப்படாது. இதற்கு சான்று அரசு தொழில் நிறுவனங்கள். போக்குவரத்து துறை, மின்வாரிய துறை, காகித உற்பத்தி நிறுவனம், இன்னும் பல புகழ் பெற்ற தனியார் நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. டன்லப் டயர், பிரிட்டானியா பிஸ்கட், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் இன்னும் பல.
1
2
Reply
அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போடும் போதே தொழில் சங்கம் அமைக்க முடியாது என்பது தான் முக்கிய ஒப்பந்த சரத்து. இது அரசுக்கும் தெரியும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியும். நிதி கேட்டு இருப்பார்கள், நிர்வாகம் கொடுக்க மறுத்து இருக்கும். அதனால் தூண்டி விட்டு போராட்டம்.
1
2
Reply