Published : 05 Oct 2024 01:33 PM
Last Updated : 05 Oct 2024 01:33 PM
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து சில்லறை விற்பனை சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.90-க்கும், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.67-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி உற்பத்தியில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் முறையாக 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. தமிழகத்தின் தக்காளி தேவையை இவ்விரு மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. கர்நாடக மாநிலம் சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் பலமனேரி, மதனப்பள்ளி, புங்கனூர், ஆகிய இடங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.33-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் சந்தை, சைதாப்பேட்டை சந்தை போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.74 என விற்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.67-க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் திடீரென தக்காளி விலை இரட்டிப்பாகி இருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, “தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது. இதனால் அங்கு மழை குறைந்து வெயில் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி குறைந்து, சந்தைக்கு வரத்தும் குறைந்து விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT