Published : 05 Oct 2024 05:36 AM
Last Updated : 05 Oct 2024 05:36 AM

மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதி: வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை நீதிபதியிடம் புகார்

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்

சென்னை: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதியைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் என்.மாரப்பன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், காணொலியில் மூத்த வழக்கறிஞர் வில்சனை மிகவும் கண்ணியக் குறைவாக நடத்தியுள்ளார். அவரது செயல், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் செயல். நீதிப் பரிபாலனத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒரு தேரின் இருசக்கரங்கள் என்றும், நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிபதிகள் அதிகார துஷ்பிர யோகம் செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க குறைதீர்ப்பு நடைமுறையை சென்னை உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

நடந்தது என்ன? டிஎன்பிஎஸ்சி-யில் முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. நீதிபதி பி.டி.ஆஷா இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொறுப்பில் இருந்த நீதிபதி விக்டோரியா கௌரி, மற்றொரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தார். நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா இடஒதுக்கீட்டை அனுமதித்து இறுதி உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில்மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி வாயிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிபதி விக்டோரியா கௌரி இடைக்கால உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி, வாதங்களை முன்வைத்தார். இதனால் கோபமான நீதிபதி சுப்பிரமணியன், "ஒரு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பதற்காக, அந்த நீதிபதி மேல்முறையீட்டு அமர்வில் இடம்பெறக் கூடாது என்று சொல்வது, எங்களை அவமதிக்கும் செயல்; நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் செயல்" என்று கோபமாகக் கூறினார்.

வழக்கறிஞர் வில்சன் வருத்தம் தெரிவித்த பின்பும், "இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை" என்றுகூறி, வேறு அமர்வுக்கு மாற்ற ஏதுவாக தலைமை நீதிபதிக்கு அனுப்பும் உத்தரவையும் பிறப்பித்தார்.

நீதிபதி விலக கோரவில்லை... இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்த மனுவில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கின் முழு தகவலையும் தெரிவிக்கும் நோக்கில் மட்டுமே தெரிவித்தார். வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று கோர வில்லை. அதே அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெறுவதில் தவறில்லை... உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, "ஒரு வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதி, அந்த வழக்கின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வரும் அமர்வில் இரு நீதிபதிகளில் ஒருவராக இடம்பெற்றிருந்தால், அந்த தனி நீதிபதி விசாரணையிலிருந்து விலகுவார் அல்லது அந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும். இது வழக்கமானது.

அதேநேரத்தில், ஒரு வழக்கை விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட, இடைக்கால உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி, அதே வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வரும் அமர்வில் ஒரு நீதிபதியாக இருந்தால், அவர் விசாரணையில் இருந்து விலக அவசியம் இல்லை. கட்டாயமும் அல்ல" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x