Published : 04 Oct 2024 06:55 PM
Last Updated : 04 Oct 2024 06:55 PM
மதுரை: ''அனைத்தும் இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது'' என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்தார்.
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இந்தியாவில் தொழிலாளர்கள் சந்தித்து வரும் சமூகப் பாதுகாப்பு பிரச்சினையின் பல்வேறு வடிவங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. சட்டக் கல்லூரி முதல்வர் குமரன் தலைமை வகித்தார். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயகுமார் பேசியது: ''இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு என்பது சட்டங்கள் மூலம் வரவில்லை. இந்தியாவில் குடும்ப பாரம்பரியத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பலவீனமான நபர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தனர்.
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தொழில் நிமித்தமாக கிராமங்களில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து தங்களுக்கு தொடர்பில்லாதவர்களின் கீ்ழ் பணிபுரியும் போது சமூகப் பாதுகாப்பு என்பது அவசியமாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தான் தொழிலாளர் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. சுதந்திர இந்தியாவுக்கு முன்பும் பல்வேறு சட்டங்கள் இருந்தன. அந்த சட்டங்களை தொழிலாளர்கள் புரிந்துகொள்வதில் பல்வேறு குழப்பம் நிலவியது. இதனால் 40-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு 4 சட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் அமலுக்கு வர காத்திருக்கின்றன.
சமூக பாதுகாப்பை வேறு கோணத்திலும் பார்க்க வேண்டும். 1990- 91-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட புதிய பொருளாதார கொள்கை தொழிலாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. 2010-க்குப் பிறகு ஏற்பட்ட டிஜிட்டல் புரட்சியும் தொழிலாளர்களின் நிலையை மாற்றியுள்ளது. அனைத்தும் இயந்திரமயமாகியுள்ள இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்களின் பாதுகாப்புக்காக வீடுகள், பணியிடங்கள் மற்றும் வெளியிடங்களில் பெண்களை பாதுகாக்கும் வகையில் தனித்தனி சட்டங்கள் இயற்றப்பட்டன. குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் சமூகப் பாதுகாப்பு சட்டங்களாகவே கருத வேண்டும்.
கடந்த 6 மாதமாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. 8 மணி நேரம் வீதம் 6 நாள் 48 மணி நேரமாக இருந்து வரும் வேலையை 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. கடும் வேலை நெருக்கடி காரணமாக, 2 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றை மனதில் வைத்து சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை கூர்ந்து கவனிக்க வேண்டியதுள்ளது.
தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் இரு பெரிய சட்டங்களாக பிஎஃப் சட்டம் மற்றும் இஎஸ்ஐ சட்டங்கள் உள்ளன. எனவே, சட்ட மாணவர்கள் சட்டங்களை வெறும் எழுத்துக்களாக, சொற்றொடர்களாக படிக்காமல் அந்த சட்டங்களைக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏன் வந்தது. அதன் பின்னால் உள்ள வரலாறு என்ன? ஏன் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன? என்பதற்கான காரணத்தையும் அறிந்து படிக்க வேண்டும்” என்று அவர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT