Published : 04 Oct 2024 05:55 PM
Last Updated : 04 Oct 2024 05:55 PM
சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 3-வது நாளாக இன்றும் நடைபெற்றது. முழு அளவில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப் படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 3-வது நாளாக இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை போல் முழு அளவிலான ஒத்திகை நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, வானில் குட்டிக்கரணங்கள் அடித்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதுவது போல் மிக நெருக்கமாக வந்து சாகசங்களை நிகழ்த்தின. மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.
மேலும், எம்ஐ-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை மீட்பது போன்ற சாகச காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். அதேபோல், சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியபடி சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, இந்திய விமானப் படை பயிற்சி அதிகாரி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முழு அளவிலான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், 72 விமானங்கள் பங்கேற்றன. விமானப்படை தினத்தன்று விமான சாகச நிகழ்ச்சி டெல்லியில் தான் நடைபெற்று வந்தது. இதை நாட்டு மக்கள் அனைவரும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 ஆண்டுகளாக டெல்லிக்கு வெளியே நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, முதலாவதாக சண்டிகரில் கடந்த 2022-ம் ஆண்டிலும், 2023-ம் ஆண்டு பிரயாக்ராஜ் நகரிலும் நடைபெற்றது. தற்போது, 3-வது ஆண்டாக சென்னையில் நடைபெறுகிறது. குறிப்பாக, தென் மாநிலத்தில் நடத்த திட்டமிடப்பட்டு சென்னையில் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மேலும், மெரினா கடற்கரை மிகப் பெரிய பரப்பளவு கொண்டுள்ளதால் எங்களுக்கு இந்நிகழ்ச்சியை நடத்த வசதியாக உள்ளது.
சூரியகிரண் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு விமானப் படையில் சேருவதற்கான ஆர்வம் ஏற்படும். இந்த சாகச நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் வர வேண்டும். இதன் மூலம், இந்நிகழ்ச்சியை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதே சமயம், இந்நிகழ்ச்சியை காண வரும் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் பட்டாசுகளை எடுத்து வர வேண்டாம்.
ஏனெனில், மெரினா கடற்கரையில் ஏராளமான பறவைகள் உள்ளன. இவை விமானிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. பொதுமக்கள் உணவுப் பொருட்களை கொண்டு வந்தால் அதை உண்ண ஏராளமான பறவைகள் வரும். எனவே, இந்த விஷயத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். பள்ளிகளுக்கு தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் இன்றைய ஒத்திகையை நிகழ்ச்சியை காண பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் திரண்டனர். இதனால், கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT