Published : 04 Oct 2024 06:01 PM
Last Updated : 04 Oct 2024 06:01 PM
சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், 18 ஆயிரம் ஏக்கர் நிலம் படிப்படியாக விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியது: ''வீட்டுவசதி வாரியத்தால் நிறைய நிலங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திட்டங்களுக்காக நிலம் எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படாததால், திட்டங்கள் வரவி்ல்லை. நிலத்தை எடுக்கவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அந்த 4(1) நோட்டீஸ் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.
உரிய பணமும் கிடைக்கவில்லை. 40 ஆண்டுகளாக இந்த நோட்டீஸ் பிரச்சினை உள்ளது. அதுபோக, '6டி' டிராப்ட் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்திலும் இதே பிரச்சினை உள்ளது. இவ்வாறாக மொத்தம் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் நில உரிமையாளர்கள் இதனை பயன்படுத்த இயலவில்லை. இருப்பினும் நிலம் விற்கப்பட்டுள்ளது. ஒருவர் 100 பேருக்கு விற்றுள்ளார். வாங்கியவர்கள் முறையாக பயன்படுத்த முடியாமல், சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். முதல்வர் இதற்கு தீர்வுகாண அறிவுறுத்தினார். அப்போது, சிலரிடம் மட்டும் அல்லாமல் மொத்தமாக மனுக்கள் வாங்கி மொத்தமாக தீர்வு காணும்படி தெரிவித்துள்ளார்.
எனவே, 16 இடங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டு, 4,488 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. 6 வகையாக இது பிரிக்கப்பட்டது. இதில் முதல்வகை '4(1)' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அடுத்தது 6 டி அறிவிக்கை செய்யப்பட்டது. இவற்றை ஒன்றிணைத்து அதில் 5 ஆயிரம் ஏக்கரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, குறி்ப்பிட்ட நிலங்களை எடுக்கலாம் என்று 30 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதில் பலர் விற்று வீடுகள் கட்டி விட்டனர். இந்த வகையில் 10 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பி, இனி அந்த நிலங்களில் இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளோம். எனவே, இந்த 10 ஆயிரம் ஏக்கரும் விடுவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே 4(1) நோட்டீஸ் வழங்கப்பட்டதில் 2002.21 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு எந்தச் செலவும் கிடையாது. மீதமுள்ள 3,000 ஏக்கரில் நீதிமன்ற வழக்கும் உள்ளது. சிலருக்கு ஆவணங்கள் சரியாக இல்லாததால் அதுவும் ஆய்வில் உள்ளது. இந்த நிலமும் திரும்பி வழங்கப்பட்டுவிடும். தற்போது வரை, 12 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஏக்கர் 4 அல்லது 5 மாதங்களில் விடுவிக்கப்படும்.
அடுத்த 2 வகைகளை பொறுத்தவரை, நில ஆர்ஜித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கான தொகை, நேரடியாக உரிமையாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பலர் பெறாததால் நீதிமன்றத்தில் கட்டப்பட்டோ, வருவாய் வைப்பீடாகவோ உள்ளது. ஆனால், நிலம் வாரியத்தால் எடுக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களிலும் தற்போது பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, இன்று அந்த இடங்களை எடுத்தால், வீடுகளை இடிக்கும் நிலைதான் வரும். இந்த இடங்களில், வாரியத்தால் என்ன தொகை தந்துள்ளோமோ அந்த தொகை, நில மேம்பாட்டுத் தொகையை கணக்கிட்டு, நிதித்துறையுடன் விவாதித்து, நிலத்தில் இருப்பவர்கள் என்ன தொகை செலுத்த வேண்டுமோ அதை செலுத்தி அந்த இடத்தை அவர்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் உரிமையாளர்கள் என்பதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
மற்றொரு வகையில், வாரியத்தால் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட அளவு இடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் முறையாக பராமரிக்கப்படாததால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டிடங்களே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலம் முழுமையாக வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமானது. வேறு யாருக்கும் உரிமையில்லை. இருப்பினும், அதில் ஏற்கெனவே கட்டிடம் கட்டியிருப்பின் உரிய ஆவணங்கள் இருந்தால், அதன் உரிமையாளர்களுக்கு நிலத்தை, சில திட்டங்கள் மூலம், வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாமல் தர முடிவெடுத்துள்ளோம்.
இதன் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் வரை விடுவிக்கப்படும் நிலை ஏற்படும். இதற்கான கோரிக்கைகள் 30 ஆண்டுகளாக உள்ளது. கடன் பெறுதல், குழந்தைகளுக்கு பிரித்தளிக்க முடியாத பிரச்சினை உள்ளது. இதற்கு ஒரே நாளில் முதல்வர் தீர்வு கண்டுள்ளார். நிறைய பணிகள் இருப்பதால், படிப்படியாகத்தான் நாங்கள் செய்ய முடியும். இதுதவிர, நிலத்தின் மதிப்பு என்பது, அங்கு குடியிருப்பவர்கள் தாங்கும் அளவுக்கானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் முடிவெடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும்,படிப்படியாக இப்பணிகளை செய்துள்ளோம்'' என்று அவர் தெரிவித்தார்.
முதல்வருக்கு நன்றி! - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் 2002.21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டது. இதற்காக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பயனாளிகள் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT