Last Updated : 04 Oct, 2024 04:49 PM

2  

Published : 04 Oct 2024 04:49 PM
Last Updated : 04 Oct 2024 04:49 PM

“2026-ல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது திமுக ஊழல்கள் வெளிவரும்” - ஹெச்.ராஜா

திருநெல்வேலியில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருநெல்வேலி: “தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது திமுக அரசின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும்,” என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக அலுவலகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (அக்.4) நடைபெற்றது. இதில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். தமிழக பாஜக தலைவர் பிரதமருக்கு இந்த நிதியை தருவதற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த நிதியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

கடந்த 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ‘நோ பால்’ போட்டு ரன் எடுப்பது போல் அந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் திமுக, விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக் கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நீக்கியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் எனச் சொல்வது போலி நாடகம். மது மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவேண்டும் என கோருவதற்கும் மத்திய அரசின் மீது பழிபோடவும் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

தமிழகத்தில் சாராய மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 28 பேர் உயிரிழந்தார்கள். இந்த ஆண்டு 68 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை திசை திருப்பி நடத்தப்பட்ட நாடகமாக விசிக மாநாடு பார்க்கப்படுகிறது. விசிக மாநாட்டில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அநாகரிகமான காட்சிகள் விசிக மாநாட்டில் நடந்தது. தமிழக பாஜக முன்னாள் தலைவரும் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அநாகரிகத்தின் உச்சமாக திருமாவளவன் பேசியுள்ளார்.

தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார். திமுகவை அதன் குற்றங்களிலிருந்து காப்பாற்ற மாநாடு என்ற நாடகத்தை விசிக அரங்கேற்றி உள்ளது.திமுகவில் போதைப்பொருள் அணி என அணியை உருவாக்க வேண்டும். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது. தற்போது தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து இருக்கிறது. கல்விக்கு மத்திய அரசு 20 தலைப்புகளில் பணம் தருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் எஸ்எஸ்ஏ திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இரு மொழிக் கொள்கை எனப் பேசிவிட்டு முதல்வர் மகள் நடத்தும் பள்ளியில் இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படவில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி, அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் குழந்தைகளுக்கு மும்மொழிக் கல்வி என்பது என்ன நியாயம்? வீட்டுக்கு மும்மொழி தமிழ்நாட்டுக்கு இரு மொழி என்பது என்ன வேடம்? இந்த போலி வேடத்தை பாஜக வீடு வீடாக எடுத்துச் செல்லும். திமுக வேஷம் மக்கள் மத்தியில் எடுபடாது. திமுகவுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அளிக்கப்பட்ட நிதி நிலையை விட தற்போதைய பாஜக ஆட்சியில் உட்கட்டமைப்புக்காக பல கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முழுமையாக பொய்யை மட்டுமே சொல்பவர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அவர், அது தொடர்பாக வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த 2021 தேர்தலை விட 2024 தேர்தலில் திமுக 6 சதவீத வாக்கை இழந்துள்ளது. 2026 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது திமுக அரசின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும்” என்று அவர் கூறினார்.

விஜய் மாநாட்டுக்கு பூர்வாங்கப் பணிகள் இந்து முறைப்படி நடத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராஜா, “தனிப்பட்ட விருப்பத்துக்காக ஆண்டவனை வழிபடுவது வேறு, இந்து உணர்வை மதிப்பது என்பது வேறு. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாமல் இந்து உணர்வை காயப்பட்த்திவிட்டு இன்று நடத்தப்பட்ட பூஜையால் எதுவும் மாறிப் போகாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x