Published : 04 Oct 2024 04:29 PM
Last Updated : 04 Oct 2024 04:29 PM
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் பல ஆண்டு காலமாக யானைகள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மா விளைச்சல் காலத்தில் மட்டும் யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து மாங்காய்களையும், மா மரங்களையும் சேதப்படுத்தி வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும் தொடர்ந்து புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சமீப காலமாக யானைகளின் தொந்தரவு மேலும் அதிகரித்துள்ளது. வனத் துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினாலும் அவை மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வந்து மக்களின் நிம்மதியைக் குலைக்கின்றன.
இந்நிலையில், நேற்று இரவு வடகரை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த 4 யானைகள் இன்று காலையில் கல்குளம் அருகே தென்னந் தோப்புகள், வாழை தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழைகளை சேதப்படுத்தின. இது குறித்து தகவலறிந்த வனத் துறையினரும் காவல் துறையினரும் அங்கு விரைந்து சென்றனர். யானைகள் நடமாடுவதால் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதனிடையே, விவசாய நிலங்களை சேதப்படுதிய யானைகள் கல்குளத்தில் முகாமிட்டன.
இதையடுத்து, அந்த யானைகள் அங்கிருந்து வெளியேறாதவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அடவி நயினார் நீர்த்தேக்க சாலை, நெல் விளாகம் சாலை ஆகியவற்றை கடந்து யானைகள் வந்துள்ளதால் இரவு நேரத்தில் அந்த சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி, யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, "வடகரை அண்ணாநகர் அருகே கல்குளம் பாசனத்துக்கு உட்பட்ட நிலங்களில் புகுந்த 4 யானைகள் தென்னை, வாழைகளை சேதப்படுத்திவிட்டு, குளத்தில் முகாமிட்டுள்ளன. அவை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகாமல் தடுக்க வனத் துறையினரும், காவல் துறையினரும், விவசாயிகளும் இணைந்து கண்காணித்து வருகின்றனர். யானைகள் புகும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.
வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள 2 சாலைகளை கடந்து யானைகள் வந்துள்ளன. தொடர்ந்து படையெடுத்து வரும் யானைகளால் விவசாய பயிர்களை இழந்து பாதிப்புக்குள்ளாவதுடன் மக்களின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. யானைகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT