Published : 04 Oct 2024 02:44 PM
Last Updated : 04 Oct 2024 02:44 PM

சென்னையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் நவீனப்படுத்தப்பட்ட தென் மண்டல ஆய்வகம் திறப்பு

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை தரமணியில் உள்ள தென் மண்டல அலுவலகத்தில் நவீனப்படுத்தப்பட்டுள்ள ஆய்வகத்தை, பிஐஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் தென் மண்டல ஆய்வக தலைவர் மீனாட்சி கணேசன். | படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை தரமணியில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் நவீனப்படுத்தப்பட்ட தென் மண்டல ஆய்வகத்தை, அமைவனத்தின் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி இன்று திறந்துவைத்தார்.

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இதன் தென் மண்டல அலுவலகம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இது பொருட்களுக்கான தர உரிமம் (ISI Mark), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலை பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாக கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பிஐஎஸ் நிறுவனத்தின் தென்மண்டல அலுலகத்தில் உள்ள ஆய்வகம் தற்போது நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்விச் சுற்றுலாவாக வரும் மாணவர்களை கவரும் வகையில் அறிவியல் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிஐஎஸ் நிறுவன தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி பங்கேற்று ஆய்வகத்தையும், பூங்காவையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.

ஆய்வகத்தின் தலைவர் மீனாட்சி கணேசன், நவீனப்படுத்தப்பட்டுள்ள ஆய்வகத்தின் சிறப்புகளை தலைமை இயக்குநருக்கு விளக்கினார். பின்னர் பிரமோத் குமார் திவாரி பேசியதாவது: ''நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரத்தை உறுதி செய்வதில் இந்த ஆய்வகத்தின் பங்கு முக்கியமானது. இந்த ஆய்வகத்தில் ரசாயனம், நுண்ணுயிரியல், இயந்திரவியல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சோதனை செய்யும் வசதிகள் உள்ளன.

இந்தப் பிரிவுகள் அதிநவீன வசதிகளுடன் கூடிய பகுப்பாய்வுக் கருவிகளை கொண்டுள்ளது. ஆய்வகத்தில் உள்ள மேம்பட்ட உபகரணங்கள், அடைக்கப்பட்ட குடிநீர், தங்கம், வெள்ளி, வீட்டு கேபிள்கள், கம்பிகள், உள்நாட்டு குக்கர்கள், எல்பிஜி சிலிண்டர்கள், அடுப்புகள் உள்ளிவற்றை சோதனை செய்ய உதவியாக இருக்கும். இந்த வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, அறிவியலை மாணவர்கள் எளிதாக கற்க உதவும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிஐஎஸ் நிறுவன தலைமை துணை இயக்குநர் (ஆய்வகங்கள்) நிஷாத் சுல்தானா ஹக், தெற்கு மண்டல தலைமை துணை இயக்குநர் பிரவீன் கன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x