Published : 04 Oct 2024 02:01 PM
Last Updated : 04 Oct 2024 02:01 PM
சென்னை: வனங்களை பாதுகாத்தால் தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.
வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று (அக்.4) நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து, வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து வன உயிரின வார விழா குறித்த விழிப்புணர்வு கையேட்டை அவர் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. வன உயிர்களை பாதுக்காக வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம். இவ்விழா ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளான அக்.2 முதல் அக்.8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தேசிய வனக்கொள்கை 1988-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வனத்திலுள்ள உயிர்களை, மரங்களை பாதுகாப்பதே இந்த கொள்கையின் நோக்கம்.
வனப்பகுதி பாதுக்காக்கப்பட்டால் தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும். தமிழக முதல்வர் வனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். சாலையோரங்களில் மரங்களை வளர்க்க வேண்டுமென்று முன்னதாகவே அறிவித்திருந்தார். அதன்படி பல இடங்களில் வனத்துறை சார்பில் மரங்களை நட்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ப.செந்தில்குமார், வனத்துறை தலைவர் சீனிவாஸ் ரெட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஸ் குமார் ஸ்ரீவஸ்தவா, மாநகராட்சியின் அடையார் மண்டலக் குழு தலைவர் இரா.துரைராஜ், வன உயிரின காப்பாளர் மணிஷ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT