Published : 04 Oct 2024 12:23 PM
Last Updated : 04 Oct 2024 12:23 PM

‘பணிக்கு இடையூறு’ - ஆனாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் குற்றச்சாட்டு; விழுப்புரம் ஆட்சியர் மறுப்பு

கோப்புப்படம்

விழுப்புரம்: “பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை, பணி செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர், எவ்வித சாதிய பாகுபாடுகளும் இன்றி சமத்துவத்துடன் நிர்வாகம் நடைபெற்று வருவதாக,” தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்.3ம் தேதி அன்று சில நாளிதழ்கள் மற்றும் சில ஊடகங்களில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சித் தலைவர் தொடர்பான செய்தி வரப்பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சியில் கடந்த 2021-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், பழங்குடியின இருளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று சங்கீதா என்பவர் ஆனாங்கூர் கிராம ஊராட்சி மன்றத் தலைராக செயல்பட்டு வருகிறார்.

பதவியேற்ற நாள் முதல் ஊராட்சி மன்றத் தலைவரின் தலைமையில் பல்வேறு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. மேலும், கடந்த காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஊராட்சி மன்றத்தலைவர் கொடியேற்றி வைத்துள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.

எவ்வித சாதிய பாகுபாடுகளும் இன்றி சமத்துவத்துடனே நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தற்போது ஊராட்சிமன்றத்தலைவர் அளித்த புகாரின் மீது விழுப்புரம் கூடுதல் ஆட்சியரால்(வளர்ச்சி) விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆனாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரால் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, “ஆனாங்கூர் ஊராட்சிமன்றத் தலைவராகிய என்னை தொடர்ந்து சாதிய வன்கொடுமை செய்துவரும் ஊராட்சி துணைத் தலைவரைக் கண்டித்து கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்.” என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்.2-ம் தேதி, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x