Published : 04 Oct 2024 04:39 AM
Last Updated : 04 Oct 2024 04:39 AM

ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ளதடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் துறவறம் பூண்டுள்ள தனது 2 மகள்களையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, கோவையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈஷா யோகாமையத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும், துறவறம் பூண்டுள்ள மனுதாரர் இளைய மகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்திருப்பது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில், ஈஷா யோகா மையத்துக்குள் சென்று போலீஸார் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னைஉயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், போலீஸார் தங்கள் மையத்துக்குள் நுழைந்து விசாரிக்கவும் தடை விதிக்க கோரி ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அவசர வழக்காக விசாரணை: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையீடு செய்தார். அதை ஏற்றுக்கொண்டு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நடந்த வாதம்:

ஈஷா யோகா மையம் தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி: தற்போது துறவிகளாக இருக்கும் அந்த இளம்பெண்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியுள்ளனர்.தனது மகள்களை ஒப்படைக்க வேண்டும் என தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது இதைதெரிவித்தும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தில் கொள்ளவில்லை.

பழங்குடியின மாணவிகளுக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படும் சம்பவத்துக்கும், எங்கள் ஆசிரமத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், ஈஷா யோகா மையத்துக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கிலேயே, விசாரணை என்ற பெயரில் தற்போது நூற்றுக்கணக்கான போலீஸார் அத்துமீறி ஆசிரமத்துக்குள் நுழைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவும் அதற்கு அடிகோலியுள்ளது. இது அங்கு உள்ளவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், மத ரீதியிலான சுதந்திரத்துக்கும் எதிரானது.

நீதிபதிகள்: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவரால் 12 பழங்குடியின பள்ளி மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் நாங்கள் தலையிட முடியாது.

ஈஷா தரப்பு: அந்த மருத்துவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சம்பவமும் ஆசிரமத்துக்குள் நடைபெறவில்லை. இவ்வாறு வாதம் நடந்தது. அதன்பிறகு, துறவறம் பூண்டு ஈஷாவில்தங்கியுள்ள 2 இளம்பெண்களிடமும் காணொலி மூலமாக நீதிபதிகள் கலந்துரையாடினர். பின்னர், அவர்கள்பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: இளம்பெண்களின் வயது, அவர்களது மனநிலை ஆகியவற்றை பார்க்கும்போது, அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலேயே அங்கு தங்கியிருப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழலில், ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் அனுமதித்திருக்க கூடாது என்பதே எங்கள் கருத்து. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். அதேபோல, ஈஷா யோகா மையத்தில் போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் போலீஸார் இனி அங்கு எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது என தடை விதிக்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x