Published : 04 Oct 2024 05:42 AM
Last Updated : 04 Oct 2024 05:42 AM

தலைவர்களின் வரலாறுகளை படிக்க வேண்டும் : ராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் அறிவுறுத்தல்

சென்னை: தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, சுய சரிதைகளை படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் நல்ல கருத்துகள் நம்மிடையே தோன்றும் என்று ராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் ம.மாணிக்கம் அறிவுறுத்தினார்.

ராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏவிஎம் அறக்கட்டளை சார்பில்57-வது வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் கடந்த அக்.1-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவுக்கு ராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் ம.மாணிக்கம் தலைமை வகித்தார். விழாவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

இரண்டாம் நாள், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி மற்றும் அருட்செல்வர் நா.மகாலிங்கம் ஆகியோரது படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘தமிழர் கண்டகாந்தி’ என்ற தலைப்பில், இளையோர் அரங்கமும், அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கும் விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.

மூன்றாம் நாளான நேற்று மாணவர் அரங்கம், பட்டிமன்றம், கதையாடல் நிகழ்வு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மாநில அளவிலான கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் வர்த்தமானன் பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பதிப்பகத்தின் நிறுவனர்  வர்த்தமானன் வரவேற்று பேசினார். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவுக்கு ராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் ம.மாணிக்கம் முன்னிலை வகித்து வர்த்தமானன் பதிப்பகத்தின் மகாத்மா காந்தி சுயசரிதை, ஜவஹர்லால் நேரு - வாழ்க்கை சரிதம், கல்வி வள்ளல்காமராஜர் - வாழ்க்கை சரிதம்,விவசாய முதல்வர் - ஓமந்தூரார் வாழ்க்கை வரலாறு ஆகிய 4 வரலாற்று நூல்களை வெளியிட்டார். நூல்களின் முதல் பிரதியை ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ம.மாணிக்கம் பேசும்போது, “வரலாற்றை தவிர்க்க முடியாத காலகட்டத்தில் இருக்கிறோம். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, சுய சரிதைகளை படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் நல்லகருத்துகள் நம்மிடையே தோன்றும். இன்றைக்கும் சாதியை வைத்துஅரசியல்வாதிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சாதி என்பதே இல்லை” என்றார்.

சுகி சிவம் பேசும்போது, “நல்லபுத்தகங்களை படிக்கும்போது, அவை நம் வாழ்க்கையை மாற்றிஅமைக்கின்றன. இதனால் புத்தகங்களை நேசிக்க வேண்டும். நாம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு எப்படிவாழ வேண்டும் என்பதை புத்தகங்கள்தான் கற்றுக் கொடுக்கின்றன” என்றார்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், கோவை ஏபிடிநிறுவனங்களின் செயல் இயக்குநர் ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x