Published : 28 Jun 2018 05:12 PM
Last Updated : 28 Jun 2018 05:12 PM
சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளாக தமிழாசிரியையாக பணியாற்றி வந்தவரை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது. வேலூர் மாவட்ட அளவில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில், சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்த தமிழாசிரியை விஜயா, குடியாத்தம் அடுத்துள்ள வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியை சிவசங்கரி, வேலூர் ஈ.வெ.ரா.நாகம்மையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சூரிய பிரகாஷ், பெரும்புலிபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் பணியில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில், தமிழாசிரியை விஜயா இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (வியாழக்கிழமை) காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் நெமிலி காவல் நிலைய ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “22 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியை விஜயாவை இடமாற்றம் செய்யப்பட்டது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பாக பழகக்கூடியவர் சிறப்பாக பாடம் நடத்த வந்தவரை இடமாற்றம் செய்ததை ஏற்க முடியாது” என்றனர். கோரிக்கை தொடர்பாக மனுவாக அளித்தால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டனர். மாணவ, மாணவிகள் பள்ளிக்குத் திரும்பினர்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறும்போது, “மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தவறான முன்னுதாரணம். அங்கு ஏற்கெனவே ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டனர். வேறு எந்த காரணமும் கிடையாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT