Last Updated : 21 Jun, 2018 09:04 AM

 

Published : 21 Jun 2018 09:04 AM
Last Updated : 21 Jun 2018 09:04 AM

தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணம் உயர்கிறது: ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்காக மின் வாரியம் காத்திருப்பு

வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், 21 லட்சம் விவசாய இணைப்புகளும், 3 லட்சம் தொழிற்சாலை இணைப்புகளும், 30 லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கான இணைப்புகளும் அடங்கும்.

இந்நிலையில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டம ிட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆக உயர்த்தவும், மும்முனை மின்சார இணைப்புக் கட்டணத்தை ரூ.5,050-ல் இருந்து ரூ.27,660 ஆகவும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புறநகர் பகுதிகளில் வீடுகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,600-ல் இருந்து ரூ.9,800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.5,050-ல் இருந்து ரூ.12,060 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள கட்டணம்தான் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும்.

இதேபோல தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்குதல், பெயர் மாற்றம் செய்தல், மின் இணைப்புக் கட்டணத்துக்காக வழங்கப்படும் காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்கான அபராதத் தொகை ஆகியவற்றையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கான ஒப்புதலை வழங்கக் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் பரிந்துரை பட்டியலை ஆய்வு செய்து இறுதி முடிவை ஒழுங்குமுறை ஆணை யம் அறிவிக்கும்.

ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x