Published : 03 Oct 2024 09:58 PM
Last Updated : 03 Oct 2024 09:58 PM
சென்னை: தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில், காவிரி உபரி நீரை தருமபுரியின் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: “தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் வழங்கவும் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி வகைகள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 59,963 விவசாயிகளுக்கு ரூ.28.23 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டத்தின் கீழ் இதுவரை, ரூ.59.41 கோடி ரூபாய், 99,025 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, பல்வேறு உழவர் நல திட்டங்களில் ரூ.133.87 கோடி செலவில் 3,32,556 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் மற்றும் துவரை உற்பத்தி விரிவாக்க திட்டத்தின் மூலம் 15,181 எக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டம் காவிரி ஆற்றில் கிடைக்கப்பெறும் உபரிநீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கான, தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை பரிசீலித்து, பென்னாகரம் வட்டத்தில் உள்ள நெருப்பூர் அருகே, காவிரி உபரி நீரை எடுத்துப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து நீர்வளத்துறை ஆராய்ந்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், காவிரி நதியின் உபரி நீரைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து, பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழலில் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் இந்த கோரிக்கையைச் செயல்படுத்துவது குறித்து சட்டப்பூர்வமாக ஆராய்ந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக எடுக்கும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT