Published : 03 Oct 2024 09:19 PM
Last Updated : 03 Oct 2024 09:19 PM

கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகளை அக்.14-க்குள் அகற்றாவிட்டால் அபராதம்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால தூண்கள் அமைக்க கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அக்.14-ம் தேதிக்குள் அகற்றாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 20 கி.மீ நீளத்துக்கு ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே 13 இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழை காலத்தில் இயற்கையாக நீர் செல்வது பாதிக்கப்பட்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, "விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், செப். 30-ம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். அக்.1-ம் தேதி நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்து, முறையாக கட்டிடக் கழிவுகளை அகற்றியுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (அக்.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, பல இடங்களில் கட்டிடக் கழிவுகள் அகற்றப்படவே இல்லை என வாதிட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதுவரை 67 சதவீத இடங்களில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், “வரும் அக்.14-ம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தாததற்காக அபராதம் விதிக்க நேரிடும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்.14-ம் தேதி நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x