Last Updated : 03 Oct, 2024 05:39 PM

 

Published : 03 Oct 2024 05:39 PM
Last Updated : 03 Oct 2024 05:39 PM

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீஸுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: சென்னை மெரினாவில் அக்.6-ம் தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட போர் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த போர் விமான சாகச நிகழச்சியில், 72 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. தேஜாஸ், ரஃபேல் மற்றும் சுகோய் சு-30 எம்கேஐ போர் விமானங்கள் மற்றும் சாரங் குழுவின் ஹெலிகாப்டர்கள் உட்பட பல்வேறு இந்திய விமானப்படை விமானங்களும் சாகசத்தில் இடம் பெறுகின்றன. இதற்கு பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளின் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? குடிநீர், கழிவறை, அடிப்படை வசதிகள், கடல் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அதேபோல், முதலுதவி சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது

என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மத்திய அமைச்சர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிலையில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் கூடாரங்களின் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, பொதுப்பணித் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x