Published : 03 Oct 2024 02:08 PM
Last Updated : 03 Oct 2024 02:08 PM

‘தமிழிசை குறித்த பேச்சுக்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ - தமிழக பாஜக

சென்னை: “பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசிக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திருமாவளவன் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கூறிய கருத்தை திசை திருப்பி, தரம் தாழ்ந்த உள்நோக்கத்துடன், “அக்கா தமிழிசை குடிக்க மாட்டார்” என்று நம்புகிறேன் எனக்கூறி, தமிழிசையை பழிவாங்கும் எண்ணத்தில் மிகவும் கொச்சைப் படுத்தி, கண்டிக்கத்தக்க வகையில், அருவருப்பாக திருமாவளவன் பேசியதை தேசிய பெண்கள் நல வாரியம் விசாரித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணினத்துக்கு களங்கத்தை உருவாக்க முயன்ற திருமாவளவன் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். திருமாவளவன் பேச்சில் உள்ள தீய நோக்கத்தை தமிழக அரசு உணர வேண்டும். பல்லாண்டு காலம் வட மாநிலங்களில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி அமைதியை கெடுத்த திருமாவளவன் இப்பொழுது தென் மாவட்டங்களில் தன்னுடைய கட்சியை நிலைநிறுத்துவதற்காக சாதிய மோதலை உருவாக்கும் வகையில், இந்த தீய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

திமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், வாரிசு அரசியலையும் கடுமையாக எதிர்த்த தமிழிசையை அவமானப்படுத்துவதன் மூலம் திமுக அரசை திருப்திப்படுத்த, துணை முதல்வர் உதயநிதியை மகிழ வைக்க, ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உள்ளத்தை குளிர வைக்க திருமாவளவன் முயன்றுள்ளார். பெண்ணினத்தை அவமானப்படுத்துவது போல் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு இதுகுறித்து திருமாவளவனிடம் முழுமையாக விசாரணை செய்து, சட்டபூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x