Published : 03 Oct 2024 01:56 PM
Last Updated : 03 Oct 2024 01:56 PM
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே சிக்னல் கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிவிசி பல்லவன் சாலை இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பிரகாஷ்(41). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் புறநகர் ரயில் நிலையத்தின் முன்புறம் நோ பார்க்கிங் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி, சவாரி ஏற்றியதாக கூறப்படுகிறது. இதை கண்ட ஆர்.பி.எஃப் போலீஸார் அவரை பிடித்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கும் பதிந்தனர். இது தொடர்பாக இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகி, அபராதம் செலுத்த ஆர்.பி.எஃப் போலீஸார் அறிவுறுத்தி இருந்தனர். இதனால், பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு பிரகாஷ் இன்று காலை வந்தார். தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய பிரகாஷ் தெரிவித்தார். அதற்கு ஆர்.பி.எஃப் போலீஸார் மறுத்துவிட்டனர். இதையடுத்து பிரகாஷ், ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள சுமார் 40 அடி உயரம் கொண்ட ரயில்வே சிக்னல் கோபுரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆர்.பி.எஃப் போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர் இறங்க மறுத்துவிட்டார். உடனடியாக, பெரியமேடு போலீஸார் மற்றும் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். பிரகாஷை கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் மெதுவாக கீழே இறங்கினார். அவரை பெரியமேடு போலீஸார் பிடித்து, இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும், ஆர்.பி.எஃப் போலீஸாரும் பிரகாஷின் பெற்றோர் மற்றும் மனைவியை அழைத்து புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT