Published : 03 Oct 2024 01:04 PM
Last Updated : 03 Oct 2024 01:04 PM
உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார்.
அந்த மேடையில் திருமாவளவன் பேசியது: 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, கடும் பொருளாதார சிக்கல் சூழ்ந்த நிலையில், கருணாநிதி கூறிய காரணங்கள், 'நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம் சிக்கியுள்ளது, அது தானாகவே பிடித்து எரியும் நிலை உள்ளது. எனவே மதுக் கடைகளை திறக்கிறேன்' என்றார். அன்று அவர் எடுத்த முடிவு சரி என்ற நாம் நியாயப்படுத்தவில்லை. அன்றிருந்த பொருளாதார நெருக்கடியில் அதை அன்றைய முதல்வர் கருணாநிதி சொன்னார். அதே கருணாநிதி 1974-ல் மதுக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
அதன்பின் மதுக்கடைகளை திறந்தது யார், டாஸ்மாக் எனும் மதுக்கடைகளை திறந்தது யார் என எவரும் பேசவில்லையே ஏன்? தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்பதுதான் டாஸ்மாக் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்பதை உருவாக்கியது எந்த அரசு, என்பது குறித்து யாரும் பேசுவதில்லையே ஏன்? இதில் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன பங்கு, ஜெயலலிதா என்ன செய்தார்? தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரான பிறகா டாஸ்மாக் வந்தது என்று கேள்வி எழுகிறது. நான் யாருக்காகவும் முட்டுக்கொடுத்து பேசவில்லை. ஆனால் உரையாடக் கூடியவர்கள், வாதாடக் கூடியவர்கள் என்ன பேசுகிறார்கள், அதில் என்ன சூட்சுமம், சூழ்ச்சி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எம்ஜிஆர் காலத்திலே மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்திலே மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கியது. அது இன்று வரை தொடர்கிறது. அது தொடரும்போது மு.க.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். ஸ்டாலின் உருவாக்கவும் இல்லை, புதிதாக திறக்கவும் இல்லை. இது குறித்தும் யாரும் பேசுவதில்லையே.
நான் முதல்வரை தனியாக சந்தித்தபோது, அவர் கூறியது, நான் கடைகளை மூடக்கூடாது என சொன்னேனா, மூடவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன் என பதறிபடியே, கூறினார். ஊடகங்களில் உங்கள் கட்சியினரும் பேசுகின்றனர்; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது; பார்ப்போம் என கூறினார் அவர். அதன் பின் விசிக மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் பேசும்போது, மதுக் கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பேசினேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT