Published : 03 Oct 2024 07:28 AM
Last Updated : 03 Oct 2024 07:28 AM

162 மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை துணை தூதரகம் 8-ம் தேதி முற்றுகை: பாமக தலைவர் அன்புமணி தகவல்

சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 162 மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 8-ம் தேதி பாமக சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ராமேஸ்சுவரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும்.அதனால், தமிழக மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது.

அதேநேரத்தில் அந்த பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர். எனவே, அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை மதிக்காத இலங்கை கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களைசுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது.

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் பாமகசார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும்,பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x