Published : 03 Oct 2024 05:34 AM
Last Updated : 03 Oct 2024 05:34 AM
சென்னை: பரங்கிமலை கன்டோன்மென்ட் மைதானத்தில் ரூ.2.8 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்துவைத்தார். தூய்மையே சேவை பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா கன்டோன்மென்ட் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதற்கு கன்டோன்மென்ட் வாரியத்தின் தலைவர் பந்தீர் தலைமை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் நடனம் மற்றும் நாடகங்கள் மூலமாக தூய்மை இந்தியா குறித்துவிளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் கன்டோன்மென்ட் தலைமைசெயல் அலுவலர் வினோத் விக்னேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுதவிர, கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் ரூ.2.8 கோடியில் அதிநவீன ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் சென்னை பரங்கிமலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மத்தியஇணை அமைச்சர் எல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2 வாரங்கள் சேவை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தூய்மை இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் விதமாக அரசு அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறோம்.
நாடு முழுவதும் தூய்மைபாரதம் இயக்கம் செப்டம்பர் 17-ல் இருந்து அக்டோபர் 2-ம் தேதி வரை பல்வேறு இடங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், பொது வளாகங்கள் அனைத்தும் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கேலோ இந்தியா திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை பெற்று ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் போன்றவற்றில் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
2047-ல்நாடு வளர்ச்சியடைந்த ஒரு வல்லரசாக மாறும்போது பொருளாதாரத்தில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT