Published : 25 Jun 2018 04:51 PM
Last Updated : 25 Jun 2018 04:51 PM
இது எங்கள் வேலைதான். கள ஆய்வு என்பது பொது சேவைக்கான முக்கிய நோக்கம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஆளும் கட்சியினர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உத்தரவு போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிட்டு வேலை வாங்க வேண்டிய ஆளுநர் ஏன் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் விமர்சிக்கின்றனர். இதுதொடர்பாக ஆளுநர் தரப்புக்கும் பல வித கேள்விகளை பலரும் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி கள ஆய்வு ஏன் என்ற தலைப்பில் அவரது வாட்ஸ்அப்பில் பதிவு செய்துள்ள கருத்து விவரம்:
“கள ஆய்வுதான் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுடன் எங்களை இணைக்கிறது. உண்மை நிலையைப் பார்க்கவும், கேட்கவும், உணரவும் செய்கிறது. வரும் புகார்கள் மீது நேரடியாகச் சென்று உண்மையை சரி பார்க்க முடிகிறது. மூன்றாம் தரப்பினரை சார்ந்திருக்க வேண்டியதும் இல்லை. கடவுள் கொடுத்துள்ள உணர்வுகளை பயன்படுத்துகின்றோம். தொடர் ஆய்வின்போது பிறப்பிக்கப்படும் கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் தொடர்ந்து பின்பற்றும் சூழல் ஏற்படும். புதிய கற்றல் இன்றி கள ஆய்வு இல்லை என்று அனுபவம் கூறுகிறது.
மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைக்க விரும்பும் ஒருவர் மக்களைச்சென்று பார்த்து, மேம்படுத்துவார். மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்க சிறந்த வழி தன்னலமற்ற முறையில் கடமையைச் செய்வதுதான். அவர்களுக்கு மதிப்பு இருப்பதோடு, பிரச்சினைகள் பெரிதாவதற்கு முன்பு தீர்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இது எங்கள் வேலைதான். மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், சேவை விரைவாக தேவைப்படும்போது நேர இழப்புகள் இன்றியும் செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கள ஆய்வு என்பது பொது சேவைக்கான முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT