Published : 02 Oct 2024 07:50 PM
Last Updated : 02 Oct 2024 07:50 PM

மதுரையில் 6% சொத்து வரி உடனடி அமுல்: மக்களை சமாளிக்க முடியாமல் கவுன்சிலர்கள் அதிருப்தி

மதுரை: மதுரை மாகநராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததால் மக்கள் அதிருப்தியை சமாளிக்க முடியாமல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குடியிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிங்கள் சதுர அடியை பொறுத்து உயர்ந்தது. இந்த வரி உயர்வுக்கே, அதிமுக மட்டுமில்லாது திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் நீண்ட காலம் சொத்து வரி ஏற்றப்படாததை காரணம் காட்டி உயர்த்தப்பட்ட சொத்து வரி அமுலுக்கு வந்தது. தற்போது மீண்டும் மதுரை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதியை கணக்கீட்டு அது முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி உடனடியாக அமலுக்கு வந்தது.

சென்னை மாநகராட்சியில் இதுபோல் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டதிற்கு, கடந்த வாரம் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மதுரை மாநகராட்சியில் கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்த்தப்படபோவதாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுதோறும் மாநகராட்சிகளில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தலாம் என்ற அரசு ஆணை இருந்தாலும், இந்த சொத்து வரி உயர்வுக்கு வெளிப்படை தன்மையாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

திமுகவை தவிர்த்து அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திமுக கவுன்சிலர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி 100 வார்டுகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் இன்னும் முழுமையான சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. குடிநீர் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளது.

பாதாள சாக்கடை அடைப்பு, கசிவு போன்றவை முழுமையாக சரி செய்யப்படவில்லை. ராஜாஜி பார்க், சுற்றுச்சூழல் பூங்கா போன்றவை பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் வந்த பிறகு, ஒரளவு தற்போது மத்திய, மாநில அரசு நிதிகள் பெறப்பட்டு, சாலைப் பணிகள், மற்ற வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது.

இந்த சூழலில் தற்போது சொத்து வரியும் உயர்த்தப்பட்டதால் வார்டுகளில் பொதுமக்கள் கவுன்சிலர்களிடம் தகராறு செய்கின்றனர். ஏற்கெனவே, வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது சொத்து வரியும் சேர்ந்து கொண்டதால் அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் எப்படி மக்களை சந்திப்பது என்று கலக்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x