Published : 02 Oct 2024 07:48 PM
Last Updated : 02 Oct 2024 07:48 PM

“விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை”- கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

5எகோவில்பட்டி: “தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார்” என்று எப்போதும்வென்றானில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எப்போதும்வென்றான் கிராமத்தில் இன்று (அக்.2) கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி‌.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எப்போதும்வென்றான் ஊராட்சி மன்றத் தலைவர் செ.முத்துக்குமார் வரவேற்றார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியது: “மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்த கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களை தேடிவந்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அங்கேயே நடவடிக்கை எடுத்து, அந்த இடத்திலேயே தீர்வு காணக்கூடிய அரசாக திமுக அரசு உள்ளது. கிராம சபைக் கூட்டங்களை, முகாம்களை தொடர்ந்து நடத்தி மக்களைத் தேடி வந்து கோரிக்கைகளைப் கேட்டு அதை தீர்வு காணக்கூடிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் விவசாயிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் தங்கள் நிலங்களுக்காக குளங்களில் உள்ள கரம்பை மற்றும் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நிச்சயம் தீர்வு காணப்படும். இங்கே தெரிவித்திருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு விரைவில் மாவட்ட நிர்வாகமும் நாங்களும் நிச்சயம் தீர்வு காண்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எப்போதும் வென்றான் பகுதியில் நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு உள்ள தடை நிச்சயம் அகற்றப்படும்.

100 நாள் வேலைவாய்ப்பை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் அது. இதற்கு மத்திய அரசுதான் நிதியைத் தர வேண்டும். ஆனால், இன்னும் நிதி வரவில்லை. மத்திய அரசின் நிதி வந்தவுடன் நிச்சயமாக 100 நாள் வேலை கிராமப்புற மக்களுக்கு தரப்படும். அதற்கு முன்பாக எவ்வளவு வேலை வாய்ப்பு தர முடியுமோ அதை அந்தப் பகுதியில் உள்ள அதிகாரிகள் செய்து தர முன்வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகை குறித்த கணக்கெடுப்பு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னும் கொஞ்ச நாளில் விடுபட்டவர் களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், நவநீதக்கண்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கல்வி உதவி கேட்ட 8-ம் வகுப்பு மாணவி: எப்போதும்வென்றானைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்து திவ்யா, கனிமொழி எம்.பி-யைச் சந்தித்து, “எனது தந்தை வைரமுத்தும் தாய் சின்னமணியும் இறந்துவிட்டனர். நானும் எனது சகோதரர் முத்துக்காட்டுராஜாவும் தாத்தா, பாட்டி பராமரிப்பில் உள்ளோம். நாங்கள் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முறையே 9-ம் வகுப்பும், 8-ம் வகுப்பும் படித்து வருகிறோம். எனது தாத்தாவுக்கு வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. பாட்டி தான் காட்டு வேலைக்குச் சென்று எங்களை பாதுகாத்து வருகிறார். எனவே, தொடர்ந்து கல்வி பயில உதவ வேண்டும்” என்றார். அதற்கு, “கண்டிப்பாக உங்களது படிப்புக்கு உதவி செய்யப்படும்” என கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x