Published : 02 Oct 2024 07:46 PM
Last Updated : 02 Oct 2024 07:46 PM

“வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழு ஆய்வு முறையாக இல்லை” - வக்பு வாரிய முன்னாள் தலைவர் சாடல்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி.

திருச்சி: “வக்பு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வு முறையாக இல்லை” என்று வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி குற்றச்சாட்டியுள்ளார்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் ஹைதர் அலி தலைமையில் திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் மாநில தலைவரும், தமிழக வக்பு வாரிய முன்னாள் தலைவருமான ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறியது: “வக்பு சட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு வக்பு வாரியத்தில் இரண்டு பெண்கள் உறுப்பினர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போதுதான் பெண்கள் உறுப்பினராக இருக்கும் விதமாக திருத்தம் செய்யப்பட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

பாஜக அரசு சட்டங்களை அவர்களுக்கு வசதியாக உருவாக்கி கொண்டு வருகிறார்கள். வக்பு திருத்த சட்டம் ஆய்வுக்காக நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த அந்தக் குழுவினர் முறையாக கள ஆய்வு செய்யவில்லை. சட்டத்தை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்று மட்டுமே கேட்கிறார்களே தவிர, முழு விளக்கங்களை கேட்பதில்லை.

வக்பு சொத்துகள் என்பது அரசு சொத்து அல்ல. முஸ்லிம்களால் வழங்கப்பட்ட சொத்து. ஏற்கெனவே இனாம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வக்பு சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். தற்போது முஸ்லிம்களின் சொத்துகளை முழுமையாக களவாட பாஜகவால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் வக்பு சொத்துகள் உள்ளது. அதில், 7,900 ஏக்கர் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தான் பெல், துப்பாக்கி தொழிற்சாலை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அதற்கு ஆண்டுக்கு ரூ.7,500 வாடகை தருகிறார்கள். அரசு தன் தேவைக்காகக் கேட்கும் வக்பு சொத்துகளை நாங்களே கொடுத்துள்ளோம்.

வக்பு திருத்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட வக்பு வாரியத்தில் இணையலாம் என்கிற அறிவிப்பு ஏற்க முடியாது. கோயில்களில் பிரசாதம் செய்வதற்குகூட குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், முஸ்லிம்களின் வக்பு சொத்துகளை பராமரிப்பதில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முழுக்க முழுக்க முஸ்லிம்களின் சொத்துகளை களவாடவே இந்தச் சட்டத்தை பாஜக கொண்டுவந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். வக்பு சொத்து எது என்பதை வருவாய்த்துறை தான் சர்வே செய்து தெரிவிப்பார்கள். திருச்செந்துறை கோயில் உள்ள இடமும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என அவர்கள் சொன்னது தான். அது தவறு என்றால் வருவாய்த்துறை தான் அதற்குக் காரணம்.

இனாம் ஒழிப்பு சட்டப்படி திருசெந்துறை கோயில் நிலம் வக்பு இடம் என்பதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதையும் முறையாக பதிவு செய்யப்படாததால் தான் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் 127 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 37 ஊழியர்கள் தான் உள்ளனர். ஊழியர்களின் எண்ணிக்கை குறைவின் காரணமாகவே பல்வேறு விவகாரங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை.

சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், பலருக்கு இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இதனால் பலர் பாஸ்போர்ட் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி சிஐஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் சட்டத்தின் படி தான் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இன்று பலர் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை கூட என்கவுன்டர் செய்கிறார்கள். இதை நீதிமன்றங்களும் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என பாஜக கூறுகிறது. ஆனால், இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் பாஜகவுக்கு கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x