Published : 02 Oct 2024 07:35 PM
Last Updated : 02 Oct 2024 07:35 PM

“உதயநிதி துணை முதல்வரானதால் துரைமுருகன் குழப்பத்தில் உள்ளார்” - ஆர்.பி.உதயகுமார்

மதுரை:"உதயநிதி துணை முதல்வரானதால் அமைச்சர் துரைமுருகன் குழப்ப மனநிலையில் உள்ளார்" என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் வளர்ச்சிப் பணி குறித்தும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், "மக்களுக்கான எந்தப் பிரச்சினை என்றாலும் நாம் போராட வேண்டும். இளைய தலைமுறையை அதிக அளவில் நாம் அரசியலில் ஈடுபடுத்திட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடி உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தார்.

ஆனால், கேரளா அரசு அணை பலமில்லை என்று நீதிமன்றம், சட்டசபை ஆகிவற்றில் தவறான செய்தியை சொல்லி வருகிறது. ஆனால், வல்லுநர்கள் குழுக்கள் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். திமுக ஆட்சியில் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேசமயம், கேரளாவில் அம்மாநில முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அம்மாநிலத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள். கேரளாவை கண்டித்து நமது முதலமைச்சர் ஒரு அறிக்கையும், விளக்கமும் கூட கொடுக்கவில்லை. இதுவரை மவுன விரதம் இருந்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தற்போது மக்களை அதிமுக குழப்புகிறது என்றும், விளம்பரம் தேடுவதாகவும் கூறுகிறார்.

இது விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல. ஐந்து மாவட்ட விவசாயிகள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் போராட்டமாகும். உரிமையை காக்கும் போராட்டமாகும். உதயநிதி துணை முதல்வரானது முதலே அமைச்சர் துரைமுருகன் குழப்பத்தில் உள்ளார். அந்த குழப்பத்தில் தான் இப்படி நிதானம் இல்லாமல் கூறி வருகிறார்” என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, எஸ்.எஸ்.சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x