Last Updated : 02 Oct, 2024 06:41 PM

 

Published : 02 Oct 2024 06:41 PM
Last Updated : 02 Oct 2024 06:41 PM

கீழணைக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை சம்பா பாசனத்துக்கு பெற்றுத்தர வேண்டும்:  விவசாய சங்கம் கோரிக்கை

கடலூர்: கீழணைக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை சம்பா பாசனத்துக்கு பெற்றுத்தர வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் இன்று (அக்.2) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட ஆட்சியர் கீழணை சம்பா பருவ பாசனத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கீழணையில் இருந்து சுமார் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று சாகுபடி செய்து வருகிறோம். கல்லணையில் இருந்து கீழணைக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவில் பத்து சதவீதம் தண்ணீரை கீழணைக்கு தர வேண்டும். ஆனால், அந்தளவுக்கு தண்ணீர் வருவதில்லை. இது குறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் பல்வேறு முறையீடு செய்தும் வரவேண்டிய அளவுக்கு தண்ணீர் வருவதில்லை.

தற்போது நாற்று நடவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதேபோன்று நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிற பயிர்களுக்கு தண்ணீர் வைத்து களை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் இருக்கிறோம். இந்தச் சூழலில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருகிறது. இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடி நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே, கடலூர் மாவட்ட ஆட்சியர், கீழணைக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளுடைய கோரிக்கையாக உள்ளது. எனவே தாங்கள் கருகும் பயிரை காப்பாற்றவும், பயிரை நடவு செய்யவும் உரிய பங்கீட்டு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x