Published : 02 Oct 2024 06:37 PM
Last Updated : 02 Oct 2024 06:37 PM
கோவை: குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவையில் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கப்படுகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுக்கு 507 காலிப் பணியிடங்களுக்கும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுக்கு 1,820 காலிப் பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,327 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது செட்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வானது பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெறும். மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச ‘வைஃபை’ வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளது. வாரத் தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT